×

சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக மோசடி 4 பேரிடம் போலீஸ் விசாரணை

சேலம், ஆக.14: சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக இளைஞர்களிடம் மோசடியில் ஈடுபட்ட 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சேலம் பள்ளப்பட்டி பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில், 4 பேரை 50க்கும் மேற்பட்டோர் வெளியே விடாமல் சிறை வைத்துள்ளதாக பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக, பல லட்சங்களை பெற்றுக்கொண்டு ஏமாற்றி வருவதாகவும், அவர்களிடம் பணத்தை திரும்ப தருமாறு கூறி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து வாழப்பாடியை சேர்ந்த விஜயகுமார்(55), கார்த்திக்குமார், பிரபாகரன், ரமேஷ் ஆகியோரை மீட்டு, போலீஸ் ஸ்டேசன் அழைத்து வந்து விசாரித்தனர். இவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்து போன 50க்கும் மேற்பட்ட இளைஞர்களும், போலீஸ் ஸ்டேசனை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து இளைஞர்கள் கூறியதாவது: இன்ஜினீயரிங் படித்த இளைஞர்களுக்கு, சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக அறிவிப்பு வெளியிட்டனர். இவர்களை நம்பி ₹1 லட்சம் முதல் ₹1.50 லட்சம் வரை கடன் வாங்கி கொடுத்தோம். வாழப்பாடியை சேர்ந்த விஜயகுமார் தான் முக்கிய ஏஜெண்ட். ஆனால் அவருக்கு கீழ் இருக்கும் சிலர், எங்களிடம் முழு தொகையை யும் வாங்கிக்கொண்டு, சிறு தொகையை விஜயகுமாருக்கு கொடுத்துள்ளனர். கடந்த 8 மாதமாக வேலை வாங்கி தரவில்லை. எப்போது பேசினாலும் இன்று நாளை என இழுத்தடித்து வந்தனர். இந்நிலையில் அனைவருக்கும் விசா வந்து விட்டது, சேலத்திற்கு வாருங்கள் என அழைத்தனர். இதனை நம்பி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பணம் கொடுத்து ஏமாந்து போன நாங்கள் வந்தோம். ஆனால் அடுத்த வாரம் விசா வந்துவிடும் என கூறி மீண்டும் அதிர்ச்சி அளித்தனர். எங்களை வெளிநாட்டிற்கு அனுப்ப வேண்டாம். கொடுத்த பணத்தை திரும்ப கொடுங்கள் என கேட்டோம். ஆனால் ஏமாற்றும் வேலை செய்து வருகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதையடுத்து விஜயகுமார் உள்பட 4 பேரையும் பள்ளப்பட்டி போலீசார், மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.  இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags :
× RELATED ₹1.50 லட்சம் கொள்ளை