×

குமரியில் தொடர் மழை 1500 டன் ரப்பர் பால் உற்பத்தி பாதிப்பு

குலசேகரம், ஆக. 14: குமரி மாவட்டத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக நடந்து வருகிறது. ரப்பர் விவசாயம் சுமார் 28 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நடந்து வருகிறது. மாவட்டத்தில் கல்குளம், விளவங்கோடு தாலுகா பகுதியில் அதிக அளவு ரப்பர் விவசாயத்தை நம்பியே பல தொழிலாளிகள் உள்ளனர். மாவட்டத்தில் உள்ள ரப்பர் மரங்களில் இருந்து கிடைக்கும் பாலில் இருந்து, தினமும் 250 டன் ரப்பர் உற்பத்தியாகி வருகிறது. ஒரு கிலோ ரப்பர் ரூ.131க்கு விலை போகிறது. இதனால் தினமும் சுமார் ரூ.32 கோடி அளவிற்கு வர்த்தகம் நடந்து வருகிறது. குளிர்காலத்தில் ரப்பர் பால் உற்பத்தி அதிமாக இருக்கும். ஆனால் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் பால் வெட்டும் தொழில் அடியோடு பாதிப்பு அடைந்துள்ளது. கடந்த ஒரு வாரகாலமாக மழை பெய்து வருவதால் ரப்பர் வெட்டும் தொழிலாளிகள் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் ஒரு சில இடங்களில் சிறிய சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் பால்வெட்டும் தொழில்நடந்து வருகிறது. மழைகாரணமாக தினமும் சுமார் 200 டன் பால்  உற்பத்தி பாதிப்பு அடைந்து வருகிறது. குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமழையால் சுமார் 1500 டன் ரப்பர் பால் உற்பத்தி பாதிப்பு அடைந்துள்ளது. இதனால் சுமார் ரூ.192 கோடி வர்த்தகம் பாதிப்பு அடைந்துள்ளதாக ரப்பர் வியாபாரிகள் தெரிவித்தனர்.


Tags :
× RELATED குழித்துறை மறைமாவட்ட பொது நிலையினர் அமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவு