×

கள்ளக்குறிச்சி நகராட்சியில் அதிகாரிகள் அலட்சியத்தால் ₹2 கோடி திட்ட பணி முடக்கம்

கள்ளக்குறிச்சி, ஆக. 14:    கள்ளக்குறிச்சி நகராட்சியில் 21 வார்டுகள் அமைந்துள்ளது. அதில் பல வார்டு பகுதியில் உள்ள தெருக்கள் மண்சாலைகளாகவே உள்ளது. மேலும் தெருக்களில் கழிவுநீர் வெளியே செல்ல கால்வாய் அமைக்கப்படாததால் கழிவுநீர் ஆங்காங்கே குட்டைபோல் தேங்கி நிற்கிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. நகராட்சி முழுவதும் மண்சாலைகளாக அமைந்துள்ள பகுதியில் தார் சாலையுடன் கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கைஎடுக்க வேண்டி அப்பகுதி மக்கள் அரசை வலியுறுத்தி வந்தனர். அதன்படி கடந்த 6 மாதத்திற்கு முன்பு தமிழ்நாடு நகர்புற சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் 12 திட்ட பணிகள் மேற்கொள்ள ரூ.2 கோடி மதிப்பிலான நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து நகராட்சி நிர்வாகத்தின் கீழ் டெண்டர் விடப்
பட்டது. அதாவது 1வது வார்டு பகுதி சிட்கோ சாலை, கிருஷ்ணா நகர், 10வது வார்டு பகுதி எம்ஆர்என் நகர் 1 முதல் 3வது தெரு வரை மற்றும் இணைப்பு சாலைகள், ரங்கன் நகர், விநாயகா நகர், 11வது வார்டு சிதம்பரம் பிள்ளை தெரு, பாரதி நகர் ஆகிய வார்டு பகுதியில் கால்வாயுடன் தார் சாலை அமைக்க கடந்த 6 மாதத்திற்கு முன்பு டெண்டர் விடப்பட்டும் இதுவரை திட்ட பணிகள் தொடங்காமல் 12 பணிகளும் முடங்கிய நிலையில் ஒப்பந்ததாரர் பணி மேற்கொள்ளாமல் கிடப்பில் போட்டுள்ளார்.

மழை காலம் தொடங்குவதற்கு முன்பு தார்சாலைகள் மற்றும் கால்வாயை உடனே அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் நகராட்சி ஆணையர் லட்சுமியிடம் பலமுறை முறையிட்டும் திட்ட பணிகள் மேற்கொள்ள எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே ரூ.2 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை உடனே தொடங்கி விரைந்து முடிக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் வேலூர் நகராட்சி மண்டல இயக்குநர் ஆகியோர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை