×

அதலபாதாளத்தில் அரசு பல் மருத்துவ கல்லூரி

புதுச்சேரி, ஆக. 14:  புதுச்சேரி அரசு நிதி ஒதுக்காததால் மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவ கல்லூரி போதிய மருத்துவ உபகரணங்கள், அத்தியாவசிய மருந்து பொருட்கள் இன்றி செயல்பட்டு வருகிறது. இதனால் அங்கு வரும் ஏழை நோயாளிகள் உரிய சிகிச்சை பெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டிய சுகாதாரத்துறை அலட்சியத்துடன் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. புதுவை எல்லை பகுதியான கோரிமேட்டில் மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவ கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு பல் சிகிச்சை பிரிவுடன் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை உள்ளிட்ட பிரிவுகளும் இடம்பெற்றுள்ளன. கடந்த 1990ல் ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரி சிறந்த பல் மருத்துவர்களை உருவாக்கிய பெருமைக்குரியதாகும். பல் வலியால் தவிக்கும் நோயாளிகளுக்கு இங்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த ஓராண்டாக இந்த மருத்துவ கல்லூரியில் சிகிச்சையின் தரம் அதலபாதாளத்துக்கு சென்றுள்ளது.

 வெள்ளி விழா கண்ட இந்த பல் மருத்துவ கல்லூரியில் மருத்துவர்கள், செவிலியர் உட்பட 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதுதவிர, எம்டிஎஸ் ஊழியர்கள் 40 பேர் பணியாற்றுகின்றனர். திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மதியம் 1.30 மணி முதல் மாலை 3.30 மணி வரையும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு புதுவை மட்டுமல்லாது தமிழக பகுதியான விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். தற்போது புதுவை அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பதால், பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை கடைபிடிக்க அனைத்து துறைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை காரணம் காட்டி, கடந்த ஓராண்டாக பல் மருத்துவ கல்லூரிக்கு தேவையான நிதி ஒதுக்கப்படுவதில்லை என தெரிகிறது. இதனால் மருத்துவ கல்லூரிக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வாங்க முடியாத நிலை உள்ளது.

மேலும், ஊழியர்களுக்கான சம்பளமும் காலதாமதமாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை மாதத்துக்கான சம்பளம் கூட இதுவரை வழங்கப்படவில்லை. ஊழியர்களுக்கே இந்த நிலையில் என்றால், நோயாளிகளின் நிலை படுமோசமாக உள்ளது.
 இங்கு பல் சுத்தம் செய்வது, சொத்தை பல் அடைப்பது, அகற்றுவது போன்ற பல்வேறு நோய்களுக்காக தினமும் நோயாளிகள் வருகின்றனர். அவ்வாறு வருபவர்கள் முதலில் சீட் பதிந்து கொண்டு மருத்துவரிடம் செல்கின்றனர். ஆனால் மருத்துவரோ, ஆன்டி பயாடிக் மருந்து இல்லை... எக்ஸ்-ரே பிலிம் இல்லை... க்ளவுஸ் (கையுறை) இல்லை... இது இல்லை... அது இல்லை... என `இல்லை’ என்ற புராணம் பாடுகின்றனர். பிறகு, நோயாளிகளிடம் அலுவலக தொலைபேசி எண்ணை கொடுத்து ஒரு வாரத்திற்கு பிறகு போன் செய்யுங்கள். அப்போது மருத்துவ உபகரணங்கள் இருந்தால் வந்து சிகிச்சை பெற்று செல்லுங்கள் என்று கூறி அனுப்புகின்றனர். இதனால் பல் வலியுடன் வரும் நோயாளிகள் மனவேதனையுடன் திரும்பி செல்கின்றனர். இதுகுறித்து பல் மருத்துவ கல்லூரி ஊழியர்கள் கூறுகையில், இக்கல்லூரி மூலம் பொதுமக்களுக்கு அளித்து வந்த சிகிச்சையை அரசு சேவையாக நினைக்காமல், பெரும் பாரமாக நினைக்கிறது. கல்லூரிக்கு தேவயைான நிதி ஒதுக்கவில்லை என்றால், எப்படி சிகிச்சை அளிக்க முடியும்.

ஒவ்வொரு மாதமும் சம்பளம் கேட்டு போராட வேண்டிய நிலை உள்ளது. பிற துறை அரசு ஊழியர்களை போல் எங்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தவில்லை. அகவிலைப்படி, மருத்துவபடி, கல்வி சலுகை என எதுவும் வழங்கவில்ைல. அவசர தேவைக்கு என்று பணம் இல்லை. கட்டிட பராமரிப்பும் இல்லை. மருந்துகள் கையிருப்பு இல்லை. மருத்துவ உபகரணங்கள் பழுதாகியும், உடைந்த நிலையிலும் உள்ளது. ஆசியாவிலேயே சிறந்த மருத்துவகல்லூரி என்று மார்தட்டிக் கொண்ட இந்த கல்லூரி, இன்று நிதி பிரச்னை காரணமாக அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது. நிர்வாகமே ஒட்டுமொத்தமாக முடங்கி போயுள்ளது. இனியும் காலம் தாழ்த்தாமல் புதுவை அரசு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும். அப்போதுதான் மருத்துவ கல்லூரி மூலம் நோயாளிகளுக்கு மீண்டும் தரமான சிகிச்சை அளிக்க முடியும் என்றனர்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...