×

விருத்தாசலம், சிதம்பரம் ரயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை

விருத்தாசலம், ஆக. 14: சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும்  ரயில்நிலையங்களில் பலத்த  போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு  வருகின்றனர்.  அதன்படி விருத்தாசலம் ரயில்வே பகுதிக்குட்பட்ட பகுதிகளில்   விருத்தாசலம் ரயில்வே சப்-இன்ஸ்பெக்டர் திருமாவளவன்  தலைமையிலான போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு  வருகின்றனர். அப்போது ரயில் தண்டவாளங்கள்  மற்றும் ரயில்  நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மெட்டல் டிடெக்டர்   கருவிகளை வைத்து சோதனையிட்டு வருகின்றனர். மேலும்  பயணிகள் கொண்டு வரும்  உடைமைகளை ஆய்வு செய்தனர்.  அதில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுத்தக்கூடிய  பொருட்கள்  உள்ளதா எனவும் சோதனையிட்டனர்.ரயில்வே  மேம்பாலங்கள்  உள்ளிட்ட பகுதிகளில் தொடர் பாதுகாப்பில்  போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.  தொடர்ந்து விழிப்புணர்வு  துண்டு பிரசுரங்களை ரயில் பயணிகளுக்கு வழங்கினர்.  அதில்  ரயில்வேயில் ஏற்படும் விபத்துகள் மற்றும் கொலை, கொள்ளை  உள்ளிட்ட  பல்வேறு சம்பவங்களை தடுக்கும் பொருட்டு துண்டு  பிரசுரங்கள் வழங்கப்பட்டது.  

அதில் அறிமுகம் இல்லா நபர்கள்  கொடுக்கும் உணவு பொருட்களை உண்ணவோ,  குளிர்பானங்கள்  அருந்தவோ வேண்டாம். பெண்கள் தங்க நகைகளை அணிந்து  பயணம்  செய்யும் போது நகைகளை சேப்டி பின்னுடன்  இணைத்து பாதுகாக்க வேண்டும்.ஓடும்  வண்டியில் ஏறுவதும்,  இறங்குவதும் உயிருக்கு ஆபத்தானது, தூங்கும்  நேரங்களில்  ஜன்னல் கதவுகளை மூடிக்கொண்டு பாதுகாப்பாக பயணம்  செய்யவும் உள்ளிட்ட வாசகங்கள்  அடங்கிய துண்டு பிரசுரங்களை  ரயில் பயணிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டது.
சிதம்பரம்:சுற்றுலா நகரமான சிதம்பரத்தில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சிதம்பரத்தில் நடராஜர் கோயில், பஸ் நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சிதம்பரம் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசாரால் நேற்று பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டது.

நேற்று பகல் 1.30 மணியளவில் சிதம்பரம் வந்த சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளின் உடைமைகள் போலீசாரால் சோதனை நடத்தப்பட்டது. சிதம்பரம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சம்பத், தனிப்பிரிவு ஏட்டு பாஸ்கரன் மற்றும் காவலர்கள் ரயிலில் சந்தேகத்திற்குரிய பயணிகளின் பெட்டிகள், பைகளை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தனர். மேலும் ரயில்வே இருப்பு பாதையிலும் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags :
× RELATED புதுவை முழுவதும் 2வது நாளாக 150...