×

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூர பிரமோற்சவம் நிறைவு

* அம்மனுக்கு வளைகாப்பு: தீர்த்தவாரி * தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

திருவண்ணாமலை, ஆக.14: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூர பிரமோற்சவம் நேற்றுடன் நிறைவடைந்தது. அதையொட்டி, சிவகங்கை தீர்த்தத்தில் தீர்த்தவாரியும், பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவமும் நடந்தது. நள்ளிரவில் பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிப்பூர பிரமோற்சவம் மிகவும் பிரசித்திபெற்றது. அதன்படி, இந்த ஆண்டு ஆடிப்பூர பிரமோற்சவம் கடந்த மாதம் 4ம் தேதி உண்ணாமுலையம்மன் சன்னதி எதிரில் உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது.அதைத்தொடர்ந்து, கடந்த 10 நாட்களாக தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில், அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் மாடவீதியில் பவனிவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இந்நிலையில், ஆடிப்பூரம் விழாவின் நிறைவாக, கோயில் 5ம் பிரகாரத்தில் அமைந்துள்ள சிவகங்கை தீர்த்தத்தில், பராசக்தி அம்மனுக்கு தீர்த்தவாரி நேற்று மதியம் 12.30 மணியளவில் நடந்தது.அதைத்தொடர்ந்து, கோயில் 3ம் பிரகாரத்தில் அமைந்துள்ள அலங்கார மண்டபத்தில் மாலை 6 மணியளவில் பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடைபெற்றது. அதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். பின்னர், காமதேனு வாகனத்தில் அம்மன் வீதிஉலா வந்து அருள்பாலித்தார்.விழாவின் நிறைவாக, அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் விஷேச நிகழ்வான ஆடிப்பூர தீமிதி விழா நள்ளிரவு 12 மணியளவில், உண்ணாமுலையம்மன் சன்னதி எதிரில் நடந்தது. அப்போது, ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.வழக்கமாக, அம்மன் கோயில்களில் மட்டுமே தீமிதி விழா நடைபெறுவது வழக்கம். ஆனால், சிவன் கோயில்களில் தீமிதி விழா நடப்பது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மட்டும் என்பது தனிச்சிறப்பாகும்.

Tags :
× RELATED இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான...