×

செங்கம் அருகே அரசு பள்ளியை தரம் உயர்த்தாததை கண்டித்து மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து சாலை மறியல் அரசு பஸ்சை சிறைபிடித்ததால் பரபரப்பு

செங்கம், ஆக.14: செங்கம் அடுத்த தீத்தாண்டபட்டு அரசு நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த தீத்தாண்டபட்டு கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 400 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 3 ஆண்டுகளாக கிராம மக்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. அதற்கான தொகையும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் அரசுக்கு செலுத்தப்பட்டுள்ளது.இருப்பினும், தீத்தாண்டபட்டு பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் நேற்று தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வகுப்புகளை புறக்கணித்தனர். மேலும், செங்கம்- தீத்தாண்டபட்டு சாலையில் பள்ளி அருகே மாணவர்கள், கிராம மக்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த அரசு டவுன் பஸ்சையும் சிறைபிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த செங்கம் தாசில்தார் ரேணுகா, வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். தாசில்தார் ரேணுகாவின் வேண்டுகோளின்பேரில் தங்களது குழந்தைகளை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் தாசில்தார், தங்களது கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கிராமமக்களிடம் உறுதியளித்தர்ர. அதன்பேரில், சிறைபிடித்த அரசு பஸ்சை விடுவித்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags :
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் 3...