×

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நில பிரச்னைக்கு தீர்வு காணக்கோரி பூச்சி மருந்துடன் வந்த பெண் குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பு

திருவண்ணாமலை, ஆக.14: திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. அப்போது, நில பிரச்னைக்கு தீர்வு காணக்கோரி பெண் ஒருவர் பூச்சி மருந்து பாட்டிலுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நடந்தது. அதில், டிஆர்ஓ ரத்தினசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகள், சுய தொழில் கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மனுக்களை அளித்தனர். மனுக்களை பதிவு செய்யும் இடத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.பொதுமக்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அவர்களுக்கு உடனுக்குடன் உதவிகளையும், உதவி உபகரணங்களையும் வழங்க வேண்டும் என்றார்.

இந்நிலையில், கோரிக்கை மனுவுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தவர்களை போலீசார் சோதித்த பிறகே அனுமதித்தனர். அதன்படி, அலுவலக நுழைவு வாயிலில் திருவண்ணாமலை மஷார் கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் மனைவி விஜயலட்சுமி(50) என்பவர் கொண்டுவந்த ைபயை போலீசார் சோதித்தனர்.அதில், நெற்பயிருக்கு தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அதை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவரது சொந்தமான 7 சென்ட் இடத்தை சிலர் ஆக்கிரமிப்பதாகவும், அதை தடுத்து நிறுத்த மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், பூச்சிக்கொல்லி மருந்துடன் வந்ததாகவும் தெரிவித்தார். எனவே, அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

ஆரணி அடுத்த ஆதனூர் கிராமத்தில் கடந்த 2007ம் ஆண்டு அரசு வழங்கிய வீட்டுமனை விபரங்கள், வருவாய்த்துறையின் பதிவேட்டில் இடம் பெறவில்லை. அதனால், அந்த வீட்டுமனையை பயன்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக 20க்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனு அளித்தனர்.கலெக்டர் அலுவலக வளாகத்தில், பொதுமக்கள் திடீரென தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவங்களை தவிர்க்க, போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பொதுமக்கள் கொண்டுசென்ற பொருட்களை சோதித்த பிறகே அலுவலகத்துக்குள் அனுமதித்தனர். கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Tags :
× RELATED திருவண்ணாமலை மற்றும் ஆரணி...