×

விரைவில் பணிகள் தொடங்குவதாக அதிகாரிகள் தகவல் பாலாறு- தென்பெண்ணை இணைப்புக்கு மத்திய அரசு ₹648 கோடி நிதி ஒதுக்கீடு விவசாயிகளின் கனவு நனவாகிறது

வேலூர், ஆக.14: பாலாறு- தென்பெண்ணை இணைப்பு திட்டத்துக்கு மத்திய அரசு ₹648 கோடி ஒதுக்கியதை தொடர்ந்து விரைவில் பணிகள் தொடங்கும் என்று பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேசிய நதிநீர் இணைப்புத்திட்டத்துக்கு முன்பாக மாநிலங்களுக்குள் உள்ள நதிகளை இணைப்பதில் அந்தந்த மாநிலங்கள் முனைப்பு காட்டின. அதன்படி தமிழகத்தில் பாலாறு- தென்பெண்ணை உட்பட மாநில ஆறுகள் இணைப்புத்திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும் என்று விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. அதன்படி மத்திய நீர்வள ஆதார அமைப்பு 2008-09ம் ஆண்டில் பாலாறு- தென்பெண்ணை- செய்யாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கான அனுமதியை வழங்கியது.உடனடியாக திட்டத்துக்கான மதிப்பீடு ₹258 கோடியில் தயாரிக்கப்பட்டு அப்போதைய திமுக அரசிடம் வழங்கப்பட்டு அதை மாநில நிதியிலேயே செயல்படுத்தவும் வலியுறுத்தியது. இதையடுத்து மாநில அரசின் நிதியில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளில் மத்திய நீர்வள ஆதார அமைப்புடன் இணைந்து திமுக அரசு களம் இறங்கியது. அதற்குள் திமுக ஆட்சி முடிந்து அடுத்து அதிமுக ஆட்சி அமைந்தது. தொடர்ந்து 2011ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா மாநில அரசின் நிதியில் மாநிலத்துக்குள் ஓடும் நதிகள் இணைக்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டார்.
இதற்கிடையில் பாலாறு- தென்பெண்ணை இணைப்புக்காக 59.50 கி.மீ தூரத்துக்கு நீர்வழித்தடங்களை மத்திய நீர்வள ஆதார அமைப்பின் பொறியாளர் சித்திக் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். முதலில் மேற்கில் சந்தூர் என்ற கிராமம் வழியாக முதல் இணைப்புக்கான வழித்தடத்தில் கற்களை நட்டனர்.

பின்னர் கிழக்கில் 5 கி.மீ தூரம் குறைவு, நீர்வழித்தடம் சரிவு காரணங்களால் அத்திசையிலும் கற்களை நட்டனர். இதற்கு ஒரு பிரிவு விவசாய சங்கம் எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட்டில் ரிட் மனுத்தாக்கல் செய்தனர். இப்பிரச்னையால் பொறியாளர் சித்திக், பாலாறு- தென்பெண்ணை இணைப்புத்திட்ட பைலை கிடப்பில் போட்டார். அதோடு அதிமுக அரசும் இத்திட்டத்தை மறந்தே போனது.இந்நிலையில், ஏற்கனவே திட்டஅனுமதி வழங்கப்பட்ட பாலாறு- தென்பெண்ணை திட்டத்துக்குத்தான் மீண்டும் திட்ட மதிப்பீடு தயாரிப்பதற்காக ₹70 லட்சத்தை ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டார் முதல்வர் பழனிசாமி. இதற்கு விவசாய சங்கங்கள் அதிர்ச்சி கலந்த எதிர்ப்பை பதிவு செய்த நிலையில், மத்திய அரசு பாலாறு- தென்பெண்ணை இணைப்புக்காக ₹648 கோடியை ஒதுக்கியுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இத்திட்டம் முழுமையாக நிறைவேறும்பட்சத்தில் பருவமழை சீசனில் தென்பெண்ணையில் வீணாகும் 3 டிஎம்சி தண்ணீர் பாலாற்றுக்கு 54 கி.மீ தூரம் அமைக்கப்படும் கால்வாய் மூலம் திருப்பிவிடப்படும். இந்த தண்ணீர் கிருஷ்ணகிரி அணையில் இருந்து நெடுங்கல் அணைக்கு வரும். அங்கிருந்து நாட்றம்பள்ளி கொட்டாறு வழியாக பாலாற்றில் தண்ணீர் விடப்படும்.

இதன் மூலம் 9 ஆயிரத்து 850 ஹெக்டர் நிலங்கள் பாசன வசதி பெறும். 1.5 லட்சம் மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும். அதோடு காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்லாவரம், தாம்பரம் நகராட்சிகளும் பலனடையும். அதேநேரத்தில் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு அறிவிப்பு குறித்த தகவல் எங்களுக்கு தமிழக அரசிடம் இருந்து வரவில்லை என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுதொடர்பாக பாலாறு பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்தவரும், விவசாய சங்க நிர்வாகியுமான பாலாறு வெங்கடேசனிடம் கேட்டபோது, ‘மத்திய நீர்வள ஆதார அமைப்பு பாலாற்று படுகையில் ஆய்வு மேற்கொண்ட போது குடியாத்தம், பேரணாம்பட்டு உட்பட பெரும்பாலான பாலாற்று படுகையை ஒட்டி அமைந்த ஒன்றியங்களில் நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்கு சென்றதை கண்டறிந்தது. இதையடுத்து மாவட்டத்தில் 15க்கும் மேற்பட்ட ஒன்றியங்கள் கருப்புப்பட்டியலில் இணைக்கப்பட்டன.இந்த ஒன்றியங்களில் உள்ள பாசன கிணறுகள், குடிநீர் கிணறுகள், ஆழ்துளை கிணறுகளை ஆழப்படுத்தவோ, புதிதாக அமைக்கவோ கூடாது என்று அறிவுறுத்தியது. தொடர்ந்து பாலாற்று படுகையில் நிலத்தடி நீராதாரத்தை மேம்படுத்தும் வகையில் பாலாறு- தென்பெண்ணை, செய்யாறு இணைப்புத்திட்டத்தை பரிந்துரைத்தது.

அதன்படி ஆய்வுகள் நடத்தப்பட்டு முடிந்த நிலையில் ₹258 கோடி செலவில் திட்டத்தை மாநில அரசே மேற்கொள்ளவும் அறிவுறுத்தியது. அப்போதைய கருணாநிதி தலைமையிலான திமுக அரசு திட்டத்தை நிறைவேற்ற முனைந்த நிலையில் ஆட்சிக்காலம் முடிந்தது.பின்னர் வந்த ஜெயலலிதா அரசு சட்டமன்றத்தில் அறிவிப்புடன் திட்டம் குறித்து பேசுவதை நிறுத்திக் கொண்டது. தற்போது மத்திய அரசு ₹648 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது’ என்றார்.


Tags :
× RELATED 8 கைதிகள் தபால் வாக்கு செலுத்தினர் வேலூர் மத்திய சிறையில்