×

திருமால்பூர் - கடற்கரை ரயிலை மீண்டும் விரைவு ரயிலாக்க வேண்டும்: பயணிகள் வலியுறுத்தல்

சென்னை, ஆக. 13: காஞ்சிபுரம் வழியாகச் செல்லும் திருமால்பூர் - சென்னை கடற்கரை விரைவு ரயில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பரங்கிமலையில் ஏற்பட்ட விபத்தால் தாம்பரத்தில் இருந்து அனைத்து ஸ்டேஷன்களிலும் நின்று செல்கிறது. இதனால் பணிக்கு செல்வோர் பாதிக்கப்படுவதால் மீண்டும் விரைவு ரயிலாக இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் ரயில் பயணிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. ரயில் நிலையத்தில் கூட்டம் நடத்த அனுமதி மறுத்ததால் ரயில் நிலையத்திற்கு வெளியே இந்தக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு பல்வேறு பணி நிமித்தம் காரணமாக அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் அதிகளவில் ரயிலில் பயணிக்கின்றனர். குறிப்பாக, காலை 7.15 மற்றும் 8.05 செல்லும் திருமால்பூர்-சென்னை கடற்கரை விரைவு ரயிலில் தலைமை செயலக ஊழியர்கள் மற்றும் பிற அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஆண், பெண் ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் என ஆயிரக்கணக்கில் பயணிக்கின்றனர்.

இந்த ரயில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் நின்று செல்வதால் குறித்த நேரத்தில் பணிக்கு சென்று வந்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னை அருகே நடந்த ரயில் விபத்தில் படியில் பயணம் செய்தவர்கள் விபத்தில் சிக்கி பலியாகினர். ரயில்வே நிர்வாகம் ஆய்வுக்கு பின், அதிகம் பேர் இந்த ரயில்களில் பயணிப்பதால் மட்டுமே இந்த விபத்து நடந்ததாக கூறி தாம்பரம் வரை விரைவு ரயிலாகவும் அதன்பின் அனைத்து ரயில் நிலையங்களிலும் மறு உத்தரவு வரும் வரை நின்று செல்லும் என உத்தரவிட்டது. இதனால், பயண நேரம் 45 நிமிடம் கூடுதலாகிறது என பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் குறித்த நேரத்தில் அலுவலகம் செல்ல இயலததால் பணி விடுப்பு, சம்பளம் குறைப்பு மேல் அதிகாரிகளின் வசைபாடுதல் என பலவகைகளில் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுவதாகவும், குறிப்பாக பெண்கள் உடல் உபாதைகளுக்கு அதிகளவில் பாதிக்கபடுவதாக குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலைமை போக்க திருமால்பூர்-சென்னை கடற்கரை ரயிலை மீண்டும் விரைவு ரயிலாக இயக்க ரயில்வே நிர்வாகத்திடம் கோரிக்கை அளிக்க முடிவெடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் ஏராளமான ரயில் பயணிகள் பங்கேற்றனர்.

Tags :
× RELATED ஆந்திராவில் தேர்தலை முன்னிட்டு 17 டாஸ்மாக் மது கடைகள் மூடல்