×

எம்எல்ஏ, எம்பி, கட்சி நிர்வாகிகள் சிபாரிசால் டெண்டர் யாருக்கு தருவது என அதிகாரிகள் திணறல்: 'பொதுப்பணித்துறையில் தேக்க நிலை'சாலை, பாலம் உள்பட பல திட்டங்கள் முடக்கம்

சென்னை, ஆக. 13: எம்எல்ஏ, எம்பி, கட்சி நிர்வாகிகள் சிபாரிசால் டெண்டர் யாருக்கு தருவது என்ற குழப்பத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர். இதனால் பொதுப்பணித்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் அனைத்து பணிகளும் அரைகுறையாக நிற்கின்றன. தமிழக பொதுப்பணித் துறையில் கட்டுமானம் மற்றும் நீர்வளம் ஆகிய 2 பிரிவு உள்ளன. இந்த பிரிவுகளின் கீழ், புதிய கட்டிடம் கட்டுவது, ஏரி, அணை புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, ஆண்டுக்கு ரூ4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன் மூலம் பல்வேறு திட்ட பணிகளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் மேற்ெகாள்ளப்படுகிறது. முன்னதாக, டெண்டர் விடுவதன் மூலம் தகுதியான ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தான் பணிகள் ஒப்படைக்கப்பட வேண்டும். குறிப்பாக, குறைந்தபட்ச ஒப்பந்தபுள்ளி கோரும் நபர்களுக்கு டெண்டர் விட வேண்டும் என்பது விதி. ஆனால், சமீப காலமாக அப்படி டெண்டர் விடப்படுவதில்லை, என்று கூறப்படுகிறது. மாறாக, டெண்டருக்கு முன்பு கான்ட்ராக்டர்களை தீர்மானித்து விடுவதாக கூறப்படுகிறது. மேலும், குறைந்தபட்ச ஒப்பந்த புள்ளி கோரும் டெண்டருக்கு விண்ணப்பிக்க அனுமதி மறுப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 7ம் தேதி சேப்பாக்கத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் ரூ72 லட்சம் மதிப்பிலான கூவம் தூர்வாரும் பணி, ரூ3 கோடி மதிப்பில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 60 படுக்கைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டும் பணி, ரூ3 கோடி மதிப்பில் செங்கல்பட்டு மருத்துவமனையில் புதிய கட்டிடம் கட்டும் பணி உள்பட 10க்கும் மேற்பட்ட திட்ட பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரை தங்களுக்கு வேண்டப்பட்ட கான்ட்ராக்டர்களுக்கு தர வேண்டும் என்று எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள், ஆளும்கட்சி முக்கிய நிர்வாகிகள் சிலர் சிபாரிசு கடிதம் அளித்துள்ளனர். மேலும், அவர்களுக்கு தான் டெண்டர் விட வேண்டும், என அதிகாரிகளை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மற்ற கான்ட்ராக்டர்கள் டெண்டருக்கு விண்ணப்பித்தால் தங்களுக்கு 10 சதவீதம் கமிஷன் தர வேண்டும் என்று அவர்கள், அதிகாரிகளுக்கு நெருக்கடி தந்ததாக கூறப்படுகிறது.

இதனால், எம்எல்ஏ, எம்பி, மாவட்ட செயலாளர் சிபாரிசு கடிதம் கொடுத்த கான்ட்ராக்டர்களுக்கு வேறு வழியில்லாமல் டெண்டர் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதே போன்று தமிழகம் முழுவதும் ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள் தாங்கள் சிபாரிசு செய்யும் கான்ட்ராக்டர்களுக்கு தான் பணி தர வேண்டும் என்று அதிகாரிகளை வற்புறுத்தி வருகின்றனர். இதனால், அதிகாரிகள் யாருக்கு டெண்டர் தருவது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். இது தொடர்பாக பொறியாளர்கள் தமிழக முதல்வரும், பொதுப்பணித்துறை துறை அமைச்சருமான எடப்பாடி பழனிசாமியிடம் புகார் அளிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Tags :
× RELATED புதுப்பாளையம் ஆரணியாற்றில் ₹20...