×

தாம்பரம் பேருந்து நிலையத்தில் மேற்கூரை இல்லாததால் பயணிகள் கடும் அவதி

தாம்பரம்: தாம்பரம் பேருந்து நிலையத்தில் மேற்கூரை இல்லாததால் பயணிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் தாம்பரம் பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து வடபழனி, கோயம்பேடு, ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மாநகர  பஸ்கள் இயக்கப்படுகின்றனர். வர்தா புயலின்போது இப்பேருந்து நிலையத்தின் மேற்கூரை காற்றில் அடித்து செல்லப்பட்டது. சேதமடைந்த மேற்கூரையை  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், இரவு நேரங்களில் மின்விளக்குகள் எரியாததால், பயணிகளிடம்  வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றது. காலை நேரத்தில் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்துக்கிடக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை என அனைத்து தரப்பு மக்களும்  வெயிலில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து, கடந்த ஏப்ரல் மாதம் தினரகன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக  பேருந்து நிலையம் முழுவதும் உள்ள மேற்கூரைகள் அகற்றப்பட்டு, பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில் மட்டும் ஓடுகள் சரிசெய்யப்பட்டது. பின்னர், அந்த  பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதனால், தற்போது பேருந்து நிறுத்தத்தில் ஒருபகுதி ஓடுகள் இல்லாமல் காணப்படுகின்றது. தற்போது மழை காலம் என்பதால்  பேருந்து நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் சிக்கி அல்லல்படுகின்றனர். எனவே, கிடப்பில் போடப்பட்ட பணிகளை விரைவில் முடிக்க சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...