×

ஹூமாயூன் மகால் புனரமைப்பு பணிக்கான திட்ட அறிக்கை அரசிடம் ஒப்படைப்பு: நிதி ஒதுக்கீட்டிற்காக பொதுப்பணித்துறை காத்திருப்பு

சென்னை: நூற்றாண்டு பழமையான ஹூமாயூன் மகால் கட்டிடத்தை பழமை மாறாமல் புனரமைக்கும் பணிக்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, தமிழக  அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள ஹூமாயூன் மகால் 200 ஆண்டுகள் பழமையானது. இந்த கட்டிடத்தில் முறையாக பராமரிப்பு பணிகள்  மேற்கொள்ளப்படாததால் கடந்த 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம், மகாலின் ஒரு பகுதியில் விரிசல் ஏற்பட்டு, மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. இதைத் தொடர்ந்து  இந்த கட்டிடத்தை சீரமைக்கும் வகையில் திட்ட அறிக்கை தயாரிக்க பொதுப்பணித்துறை சார்பில் கடந்த 2014 ஜனவரி மாதத்தில் மூன்று பேர் கொண்ட குழு  நியமிக்கப்பட்டது.

இந்த குழு, ஆய்வு செய்து ஹூமாயூன் மகாலை சீரமைப்பதற்கு உண்டாகும் செலவு விவரங்களை திட்ட அறிக்கையாக தயார் செய்து தமிழக அரசிடம் அளித்தது.  அப்போது ₹14 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அரசு இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இந்நிலையில், ஹூமாயூன் மகால் கட்டிடத்தின் உட்பகுதி இடிந்து, கட்டிடம் தனது பலத்தை இழந்து ஒட்டுமொத்தமாக பயன்படுத்த முடியாத நிலை உருவானது.  இதனால், கட்டிடத்தை இடித்து புதிய அடுக்குமாடி கட்டுவதற்கு பொதுப்பணித்துறை தீர்மானித்தது. ஆனால், இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு  தெரிவித்தனர். இதையடுத்து புதிய கட்டிடம் கட்டும் திட்டத்தை பொதுப்பணித்துறை கைவிட்டது.

இதை தொடர்ந்து, ஹூமாயூன் மகால் புனரமைப்பு பணிக்கு சுற்றுலாத் துறை நிதி மூலம் மேற்கொள்ள பொதுப்பணித்துறை முடிவு செய்தது. இதற்காக,  பொதுப்பணித்துறை சார்பில் சுற்றுலாத் துறைக்கு கடிதம் எழுதியது. ஆனால், தற்போது நிதி இல்லை எனக்கூறி சுற்றுலாத்துறை கைவிரித்தது. இதனால்,  ஹூமாயூன் மகால் புனரமைப்பு பணிகளை ெதாடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், ஹூமாயூன் மகாலை பழமை மாறாமல் புனரமைப்பதற்கு ₹38  ேகாடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதை தொடர்ந்து ஹூமாயூன் மகால் புனரமைப்பு பணிக்கு  திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு, நிதித்துறையின் ஒப்புதலுக்காக கடந்த 10 நாட்களுக்கு முன்பு பொதுப்பணித்துறை அனுப்பி வைத்துள்ளது.ஆனால், தற்போது வரை அதற்கான கோப்புகள் நிதித்துறையிடம் தான் உள்ளது. இங்கு ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான  அரசாணை வெளியிடப்படும். அதன்பிறகு ஹூமாயூன் மகால் புனரமைப்பு பணிக்கு டெண்டர் விடப்பட்டு, ஒப்பந்த நிறுவனம் மூலம் பணிகள் தொடங்கப்படும்  என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags :
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...