×

கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கியபோது இன்ஜினியர் வீட்டில் திருடிய வாலிபர் கைது: 3 செல்போன்கள் பறிமுதல்

துரைப்பாக்கம்,  ஆக. 13: ஆந்திராவை சேர்ந்தவர் கிரண்குமார் (25). சென்னை, சோழிங்கநல்லூர்  நியூ குமரன் நகரில் நண்பர்கள் 3 பேருடன் வாடகை வீட்டில் தங்கி, சாப்ட்வேர்  நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.நேற்று முன்தினம்  இரவு காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு தூங்கியபோது  வீட்டுக்குள் இருந்து சத்தம் வந்தது. கிரண்குமார் எழுந்து பார்த்தபோது  ஒருவன் வீட்டுக்குள் இருந்து ஓடியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.  புகாரின்பேரில், செம்மஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து  வந்தனர். இந்நிலையில் சோழிங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் புகழேந்தி,  ஏட்டுக்கள் புஷ்பராஜ், தாமோதரன் ஆகியோர் சோழிங்கநல்லூர் சிக்னல் அருகில்  வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும்படியாக பைக்கில் வந்த  வாலிபரை நிறுத்துமாறு கூறியும், நிற்காமல் சென்றதால் துரத்தி சென்று  பிடித்து, காவல்நிலையம் கொண்டு வந்தனர்.

போலீஸ் விசாரணையில்  சோழிங்கநல்லூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த அபிமன்யூ (23)  என்பதும், கிரண்குமார் வீட்டில் செல்போன் திருடியதும் தெரியவந்தது. மேலும்,  இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதும்,  திருட்டு வழக்கில் கைதாகி கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வெளியில் வந்ததும்  விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு  செய்து அவரை கைது செய்தனர். பின்னர் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி,  புழல் சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து 3 செல்போன்கள் பறிமுதல்  செய்யப்பட்டது.




Tags :
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில்...