×

எஸ்.எல்.பி. பள்ளி மைதானம் சீரமைப்பு சுதந்திர தின விழாவுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வர தடை 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள்

நாகர்கோவில், ஆக.13: சுதந்திர தின விழாவுக்காக எஸ்.எல்.பி. பள்ளி மைதானத்தில் சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
சுதந்திர தின விழா வருகிற 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த 3 ஆண்டுகளாக நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியத்தில் வைத்து தான்  சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற்று வந்தன. நீதிமன்ற கட்டுமான பணிக்களுக்காக எஸ்எல்பி பள்ளி சுற்று சுவர் இடிக்கப்பட்டது. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக சுதந்திர தின விழா மட்டுமின்றி, குடியரசு தின விழாவும் அண்ணா ஸடேடியத்திற்கு மாற்றப்பட்டிருந்தது. இந்தநிலையில் தற்போது நீதிமன்ற பணிகள் முடிந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளதால் எஸ்.எல்.பி. பள்ளி சுற்றுச்சுவர் மற்றும் மைதானம் சீரமைக்கப்பட்டது. இதையடுத்து இந்தாண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டம் எஸ்.எல்.பி. பள்ளி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. வருகிற 15ம் தேதி எஸ்.எல்.பி. பள்ளி மைதானத்தில் நடக்கும் சுதந்திர தின விழாவில் கலெக்டர் பிரசாந்த் எம். வடநேரே தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். எஸ்.பி. நாத் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

சுதந்திர தின விழாவிற்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. ரயில் நிலையம், பஸ் நிலையம் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக எஸ்பி நாத் ேபாலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மாவட்டம் முழுவதும் சுமார் 1500 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர். எஸ்.எல்.பி. பள்ளி மைதானத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. சுதந்திர தின விழாவுக்கான போலீசார் அணிவகுப்பு ஒத்திகை மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி ஒத்திகை நடந்து வருகின்றன.
சுதந்திர தின விழாவுக்காக எஸ்.எல்.பி. பள்ளி மைதானம் சீரமைக்கப்பட்டு உள்ளது. நகராட்சி ஆணையர் சரவணக்குமார் உத்தரவின் பேரில் நகராட்சி பணியாளர்கள் நேற்று எஸ்.எல்.பி. பள்ளி மைதானத்தில் வளர்ந்துள்ள புற்களை வெட்டி அகற்றினர். மண் மேடுகள் சமன்படுத்தப்பட்டன.

பள்ளி வளாகத்தில் தேங்கி  கிடந்த தண்ணீரும் அகற்றப்பட்டது. இன்றும் சீரமைப்பு பணி நடக்கின்றன. குமரி மாவட்டத்தில் வருகிற 15ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளது. இதையொட்டி சுதந்திர தின விழாவிலும் பிளாஸ்டிக் பயன்பாடு எக்காரணத்தை கொண்டும் இருக்க கூடாது என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தண்ணீர் வழங்க கூட பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்படுத்த கூடாது. மேலும் டீ, காபி வழங்கவும் பேப்பர் கப், பிளாஸ்டிக் கப் பயன்படுத்தாமல் சில்வர் டம்ளர் தான் பயன்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்களும் இதை கடைபிடிக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டு உள்ளனர்.

Tags :
× RELATED ‘வைப்புநிதி உங்கள் அருகில்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி