×

தாசில்தார் யார் என்பதில் நீடிக்கும் இழுபறி சான்றிதழ் விநியோகம் கடும் பாதிப்பு தினமும் அலைந்து ஏமாறும் பொதுமக்கள்

நாகர்கோவில், ஆக.13:  அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அலுவலகத்தில் இருந்து வழங்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் கிடைக்காமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அலுவலகத்தில் பணியாற்றி வரும் பெண் ஒருவர் கூறிய பாலியல் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புகார், விசாகா கமிட்டி எனப்படும் உள்ளூர் புகார் குழுவிடம் சென்றது. புகார் தெரிவித்த பெண், புகாரில் கையெழுத்திட்டு இருந்த ஊழியர்கள், புகாருக்கு ஆளான தாசில்தார் உள்பட பல தரப்பினரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், தாசில்தார் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட வில்லை என்ற அடிப்படையில் விசாகா கமிட்டி அறிக்கை மாவட்ட வருவாய் அலுவலர் வழியாக கலெக்டரிடம் வழங்கப்பட்டது.

இந்த அறிக்கை வழங்கப்பட்ட சில நாட்களிலேயே அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் பணியாற்றிய தாசில்தார் உள்ளிட்ட ஒட்டு மொத்த அலுவலர்களையும் இடமாற்றம் செய்து கலெக்டர் பிரசாந்த் எம். வடநேரே உத்தரவிட்டார். இந்தநிலையில் அகஸ்தீஸ்வரம் தாசில்தாராக பணியாற்றிய சஜித், கல்குளம் தாசில்தாராக புதிய பணியிடத்தில் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார். கல்குளம் தாசில்தார் ராஜா, அகஸ்தீஸ்வரம் தாசில்தாராக நியமிக்கப்பட்டார். ஆனால் ராஜா புதிய பணியிடத்தில் சேரவில்லை. உடனடியாக புதிய பணியிடத்தில் சேர வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும் அவர் பணியேற்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து அகஸ்தீஸ்வரம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஆறுமுகநயினாருக்கு அகஸ்தீஸ்வரம் தாசில்தாராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அகஸ்தீஸ்வரம் தாசில்தார் யார்? என்பதில் தொடர்ந்து குழப்பமான நிலை நீடித்து வரும் நிலையில் சான்றிதழ்கள் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

சாதி, வருமானம், இருப்பிடம், முதல் தலைமுறை பட்டதாரி உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் தற்போது ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கப்படுகிறது. இ சேவை மையங்கள் மூலம் விண்ணப்பித்து அவை உரிய அதிகாரிகள் மூலம் பரிசீலனை செய்யப்பட்டு குறைந்த பட்சம் 10 நாட்களுக்குள் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். ஆனால் அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் பிரச்சினை மற்றும் ஊழியர்கள் இடமாற்ற பிரச்சினையால் சான்றிதழ்கள் பரிசீலனை செய்வது பாதிக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படாமல் உள்ளது.
இ சேவை மையங்களில் விசாரித்து விட்டு அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்துக்கு வருபவர்கள்,

அங்கு தாசில்தார் மற்றும் ஊழியர்கள் இல்லாமல் ஏமாற்றத்துடன் செல்லும் நிலை உள்ளது.  இருப்பிட  சான்றிதழ்கள், கட்டிட பராமரிப்புக்கான சான்றிதழ் உள்ளிட்ட ஏராளமான சான்றிதழ்களுக்காக பலர் ஒரு வாரத்துக்கு மேல் அலைந்து கொண்டு இருப்பதாக வேதனையுடன் கூறினர். இவ்வாறு வரும் பொதுமக்களிடம் சர்வர் பிரச்சினை, சாவி இல்லை என கூறி அங்குள்ளவர்கள் திருப்பி அனுப்பி வருகிறார்கள். எனவே தேங்கி உள்ள சான்றிதழ்களை விரைவில் பரிசீலனை செய்து வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED குழித்துறை மறைமாவட்ட பொது நிலையினர் அமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவு