×

நாகர்கோவிலில் அரசு பஸ் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை : அதிகாரிகள் டார்ச்சர் காரணமா? உறவினர்கள் பரபரப்பு புகார்

நாகர்கோவில், ஆக.13 :  நாகர்கோவிலில் அரசு பஸ் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அதிகாரிகள் டார்ச்சர் காரணமாக அவர் தற்கொலை செய்ததாக உறவினர்கள் புகார் கூறி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. நாகர்கோவில் பெருவிளை பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (54). அரசு பஸ் டிரைவர். இவர் நாகர்கோவில் போக்குவரத்து கழக பணிமனை எண் 1 ல் டிரைவராக இருந்தார். கோவை மற்றும் சென்னைக்கு செல்லும் பஸ்களை ஓட்டினார். இந்த நிலையில் சமீப காலமாக இவரை அடிக்கடி பணி மாற்றி வந்துள்ளனர். இதனால் ராதாகிருஷ்ணன் மனம் உடைந்தார். வேண்டுமென்றே அதிகாரி தன்ைன அவதூறாக பேசி அவமானப்படுத்துவதாக வீட்டில் இருந்தவர்களிடம் வேதனையுடன் கூறி வந்தார். மனம் உடைந்த நிலையில் இருந்து வந்த ராதாகிருஷ்ணன், கடந்த 10ம் தேதி திடீரென விஷம் குடித்து மயங்கினார்.

வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்து வந்த ராதாகிருஷ்ணன், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து ஆசாரிபள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். ராதாகிருஷ்ணனின் உறவினர்கள் கூறுகையில், அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் டிரைவர், கண்டக்டர்களை அதிகாரிகள் தேவையில்லாமல் திட்டுவதும், பணி வழங்காமல் இழுத்தடிப்பு செய்வதும் வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் ராதாகிருஷ்ணனை கடுமையாக திட்டி உள்ளனர். அவர்  இன்னும் சில வருடத்தில் பணி ஓய்வு பெற போகிறார். இருப்பினும் அவரது உடல் நிலை மற்றும் வயதை கருத்தில் கொள்ளாமல் மன வேதனை அடையும் வகையில் திட்டியது குறித்து தனது மனைவியிடம் கூறி வேதனைப்பட்டு உள்ளார். அந்த வேதனை தாங்காமல் தான் அவர் விஷம் குடித்து உயிரை மாய்த்துள்ளார் என்றனர். தற்கொலை செய்த ராதாகிருஷ்ணனுக்கு அனிதா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

Tags :
× RELATED தமிழ்நாட்டில் முதல் முறையாக ரோஜாவனம்...