×

ஆரல்வாய்மொழி அருகே பரிதாபம் தறிகெட்டு ஓடிய அரசு பஸ் மோதி இளம்பெண் பலி

ஆரல்வாய்மொழி, ஆக. 13: ஆரல்வாய்மொழி அருகே நேற்று காலை சாலையில் தறிகெட்டு ஓடிய அரசு பஸ் மோதி பைக்கில் சென்ற இளம் பெண் பலியானார். ஆரல்வாய்மொழியில் இருந்து நாகர்கோவிலுக்கு தாழக்குடி-திருப்பதிசாரம் சாலை வழியாக தடம் எண் 33டி/வி அரசு பஸ் இயக்கப்படுகிறது. நேற்று காலை இந்த பஸ் 40 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த சாலையின் ஒருபுறம் தேரேகால்புதூர் கால்வாய் செல்கிறது. மறுபுறம் சுமார் 10 அடி பள்ளமான பகுதியில் தென்னந்தோப்புகள் உள்ளன. ஆபத்தான இந்த சாலையில் செல்லும் இருசக்கர வாகனங்கள் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில்தான் பயணம் செய்து வருகின்றன. இந்த நிலையில் கண்டன்மேட்டு காலனி அருகே அரசு பஸ் வந்தபோது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் தறிகெட்டு ஓடி கால்வாயில் பாயும் நிலை ஏற்பட்டது. இதனால் பயணிகள் அலறினர். சுதாரித்துக் கொண்ட டிரைவர் பஸ்சை மறுபக்கமாக திருப்பினார். அப்போது தேரேகால்புதூரை சேர்ந்த குமாரவேல் மகள் இந்து (24) என்பவர் பைக்கில் தாழக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அவர் மீது பஸ் மோதியது. இதில் பைக்குடன் இந்து பஸ்சின் அடியில் சிக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பைக் மீது மோதிய வேகத்தில் பஸ் பள்ளமான தென்னந்தோப்பில் பாய்ந்தது. தென்னை மரங்கள் மீது பஸ் சாய்ந்ததால் பள்ளத்தில் கவிழாமல் தப்பியது. இதனால் பஸ்சில் இருந்த சுமார் 40 பயணிகள் நூலிழையில் உயிர் பிழைத்தனர். இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடம் விரைந்து வந்து இந்துவின் உடலை மீட்க முயன்றனர். ஆனால் உடல் பஸ்சின் அடியில் சிக்கி இருந்ததால் மீட்க முடியவில்லை. உடனடியாக கிரேன் வரவழைக்கப்பட்டு பஸ்சை உயர்த்தி இந்துவின் உடலை மீட்டனர். மேலும் சம்பவ இடம் வந்த ஆரல்வாய்மொழி போலீசார் சடலத்தை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்தில் உயிரிழந்த இந்து முதியோர் பென்ஷன் உட்பட அரசு உதவிகளை பெற்றுத்தரும் நிறுவனம் ஒன்றில் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்தார். கண்டன்மேட்டு காலனியில் ஒருவருக்கு முதியோர் பென்ஷன் வழங்க சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இவரது தந்தை குமாரவேல் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்துக்குள்ளான அரசு பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் காப்பிக்காடு பகுதியைச் சேர்ந்த குமாரசாமி மகன் கிரிதர்(43) ஆரல்வாய்மொழி காவல்நிலையத்தில் சரணடைந்தார். போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். புதிய டிரைவர் தடம் எண் 33டி/வி அரசு பஸ்சில் வழக்கமாக வரும் டிரைவர்கள் இந்த சாலையில் பஸ்சை ஓட்டிய அனுபவம் உள்ளவர்கள். அதில் நேற்று பணியாற்ற வேண்டிய டிரைவர் விடுப்பில் சென்றுள்ளார். இதனால் நேற்று புதிய டிரைவர் பஸ்சை ஓட்டியுள்ளார். அவருக்கு இந்த சாலையில் பஸ்சை செலுத்துவதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் இந்த விபத்து நடந்துள்ளது என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

ஆபத்தான சாலை தாழக்குடி - திருப்பதிசாரம் சாலை சீரமைக்கும் பணியின் போது, சாலை உயர்ந்தும் இருபுறமும் மிகவும் பள்ளமாகவும் காணப்பட்டது. இதனை சமன் செய்ய வேண்டும் என அப்போதே பொதுமக்கள், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இதனால் இந்த சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வழிவிட்டு ஒதுங்கும் வாகனங்கள் கால்வாயில் கவிழும் ஆபத்தான நிலை உள்ளது.
நேற்றும் எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட்டு ஒதுங்கிய போது தான் அரசுபஸ் கால்வாயில் கவிழ்வது போல் சென்றது. அதனை கட்டுப்படுத்தி மீண்டும் சாலைக்கு டிரைவர் கொண்டு வந்த போது கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதி தென்னந்தோப்பில் பாய்ந்தது என பொதுமக்கள் கூறுகின்றனர்.

Tags :
× RELATED ‘வைப்புநிதி உங்கள் அருகில்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி