×

குடிபோதை, மணல் கடத்தல் புகார் 2 ஏட்டுகள் ஆயுதப்படைக்கு மாற்றம்

விழுப்புரம், ஆக. 13: விழுப்புரம் மாவட்டத்தில் குடிபோதையில் இருந்த ஏட்டு மற்றும் மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த மற்றொரு ஏட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் அருகே வளவனூர் காவல்நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் தேவநாதன். சமீபகாலமாக வளவனூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தொடர்ந்து மணல் திருட்டு நடந்து வருகிறது. எஸ்பியின் அதிரடி நடவடிக்கையால் தொடர்ந்து திருட்டு மணல் லாரிகள் பிடிக்கப்பட்டு, மணல் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர். இதனிடையே மணல் கடத்தலுக்கு சில போலீசாரே உடந்தையாக இருப்பதாக கூறப்பட்டது. அதன்படி அவர்களை கண்காணிக்க உத்தரவிடப்பட்ட நிலையில் வளவனூர் காவல்நிலையத்தில் ஏட்டாக பணியாற்றிவரும் தேவநாதன் என்பவர் மணல்கடத்தலுக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் அவரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து எஸ்பி ஜெயக்குமார் உத்தரவிட்டார். அதே போல் பனையபுரம்-சின்னகள்ளிப்பட்டு சாலையில் நெடுஞ்சாலை ரோந்து எண்-18 செயல்பட்டு வருகிறது. இந்த வாகனத்தில் பெரியதச்சூர் காவல்நிலைய ஏட்டு செந்தில்குமார் என்பவர் ரோந்து வாகனத்தில் பணிபுரிந்து வருகிறார். பணியிலிருந்த போது குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த வழியாக சென்ற அதிகாரி இதனை உறுதி செய்து எஸ்பியிடம் தகவல் கூறியுள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் அவரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து எஸ்பி ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை