×

திருவெண்ணெய்நல்லூர் அருகே கிடப்பில் கிடக்கும் மேம்பாலம் கட்டும் பணி

திருவெண்ணெய்நல்லூர், ஆக. 13:  விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்மங்கலம்-கூரானூர் செல்லும் சாலையின் குறுக்கே மலட்டாறு செல்கிறது. மழை காலங்களில் மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் தென்மங்கலம், கூரானூர், மேலமங்கலம் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராமமக்கள் அவர்களின் அன்றாட தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்கு கூட வெளியூர்களுக்கு சென்று, வரமுடியாமல் முடங்கி விடும் நிலை உள்ளது. தேர்தல் என்றால் இப்பகுதி மக்கள் அனைவரும் வேட்பாளர்களிடம் கேட்கும் முக்கிய கோரிக்கை, இந்த மலட்டாறில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பதுதான். மேம்பாலம் அமைக்க கோரி இப்பகுதி மக்கள் பல முறை கோரிக்கை வைத்தும் காற்றில் பறக்க விடப்பட்ட நிலையில், தற்போது இப்பகுதி மக்களின் கோரிக்கையை அரசு ஏற்று ரூ.7 கோடியே 10 லட்சம் மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் கட்ட அனுமதி அளித்தது.

இதை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன் அமைச்சர் சண்முகம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு தொகுதி குமரகுரு எம்எல்ஏ, உள்ளிட்ட அதிமுக முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் மேம்பாலம் கட்டும் பணியை துவக்கி வைத்தார். ஆனால் இதுநாள்வரை மேம்பாலம் கட்டுவதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமல் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது மழை காலம் என்பதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் இப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்படும் என பொதுமக்கள் வேதனையுடன் கூறுகின்றனர். எனவே, போர்க்கால அடிப்படையில் மேம்பால கட்டுமான பணியை துவங்கி விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு விட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை