×

78 வீடுகளில் வெள்ளம் புகுந்தது நிவாரண முகாமில் 136 பேர் தங்க வைப்பு

குமாரபாளையம், ஆக.13: மேட்டூர் அணையிலிருந்து, காவிரி ஆற்றில் 1.20 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் குமாரபாளையம் நகராட்சி பகுதியில்  தாழ்வான பகுதியில் உள்ள 78 வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதையடுத்து இங்கு வசிக்கும் 136 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் பெய்துவரும் கனமழையால், அங்குள்ள அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணையிலிருந்து  விநாடிக்கு 1லட்சத்து 30 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த உபரி நீரால், குமாரபாளையம் காவிரி கரையோரமுள்ள மணிமேகலை தெரு,  கலைமகள் வீதி ஆகிய இடங்களில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்துள்ளது.

இங்கு வசித்தவர்களை நடராஜா திருமண மண்டபம், புத்தர் தெரு அரசு  பள்ளி ஆகிய இடங்களில் தற்காலிக நிவாரண முகாம் அமைத்து, அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 78 குடும்பங்களை சேர்ந்த  136 பேருக்கு உணவு மற்றும் மருத்துவ வசதிகளை அதிகாரிகள் செய்து கொடுத்துள்ளனர். நிவாரண முகாமில் உள்ளவர்களை, கலெக்டர் ஆசியா மரியம் நேரில் சந்தித்து பேசினார். பின்னர் காவிரி ஆற்றங்கரைக்கு சென்று, தேவையான  முன்னேற்பாடுகளை செய்யும்படி அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

Tags :
× RELATED வையப்பமலையில் பக்தர்கள் கிரிவலம்