×

தஞ்சையில் உள்ள 6 முருகன் கோயில்களில் பாதயாத்திரை குழு வழிபாடு

தஞ்சை, ஆக. 13:  தஞ்சையில் உள்ள 6 முருகன் கோயில்களில் பாதயாத்திரை குழுவினர் வழிபாடு நடத்தினர். முருகனின் ஆறுபடை வீடுகள் உள்ளதுபோல் தஞ்சை நகரில் உள்ள 6 கோயில்களில் முருகப்பெருமான், ஆறுபடை வீடுகளாக பக்தர்களுக்கு காட்சியளித்து  வருகிறார். இதனால் தஞ்சையில் ஆண்டுதோறும் வெற்றிவேல் முருகன் ஆறுபடை வீடு பாதயாத்திரை குழுவினரின் வழிபாடு நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று தஞ்சை பெரிய கோயிலில் இருந்து 40து  ஆண்டாக வெற்றிவேல் முருகன் ஆறுபடை வீடு பாதயாத்திரை குழுவினர் 6 கோயில்களுக்கும் பாதயாத்திரையாக புறப்பட்டனர். அதன்படி முதலில் இந்த பாதயாத்திரை குழுவினர் மேலஅலங்கத்தில் உள்ள முருகன் கோயிலுக்கு (திருப்பரங்குன்றம்) சென்றனர்.

இதைதொடர்ந்து வடக்கு அலங்கம் முருகன் கோயில் (பழமுதிர்ச்சோலை), குறிச்சி தெரு முருகன் கோயில் (திருத்தணி), தஞ்சை ஆட்டுமந்தைத்தெரு முருகன் கோயில் (சுவாமிமலை), சின்ன அரிசிக்காரத்தெரு முருகன் கோயில் (பழனி) ஆகிய கோயில்களுக்கு பாதயாத்திரையாக சென்று பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். இறுதியாக தஞ்சை பூக்காரத்தெரு சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு (திருச்செந்தூர்) பக்தர்கள் சென்றனர். இதில் 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். இந்த பாதயாத்திரை, தஞ்சை பெரிய கோயிலில் நிறைவடைந்தது. இதைதொடர்ந்துபெரிய கோயிலில் உள்ள முருகன் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Tags :
× RELATED தஞ்சாவூரில் சிறுதானிய பயிர்கள்...