×

திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம்3

திருவிடைமருதூர், ஆக. 13: திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் நேற்று நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். திருவிடைமருதூரில் திருவாவடுதுறை ஆதினத்துக்கு சொந்தமான மகாலிங்கசுவமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர உற்சவம் நடைபெறும். விழாவில் அம்மன் தனித்தேரில் எழுந்தருள தேரோட்டம் நடைபெறும். 1936ம் ஆண்டுக்கு பிறகு தைப்பூச தேரோட்டம் பல்வேறு காரணங்களால் தடைப்பட்டு நின்றுபோனது. இந்தாண்டு ஆடிப்பூர அம்மனுக்கு புதிய தேர் செய்ய  திருவாவடுதுறை ஆதினம் 24வது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பராமாச்சாரிய சுவாமி உத்தரவிட்டார். அதன்படி பக்தர்களின்  நன்கொடையோடு 45 அடி உயரம், 15 அடி அகலத்தில் ஆடிப்பூர தேர் புதிதாக செய்யப்பட்டது. தேரின் மொத்த எடை 4 டன்னாகும்.

இதைதொடர்ந்து ஆடிப்பூர தேரின் வெள்ளோட்டம் கடந்த 1ம் தேதி நடந்தது. இதையடுத்து 10 நாட்கள் நடைபெறும்  ஆடிப்பூர திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான  தேரோட்டம் நேற்று நடந்தது. தேரில் ஆடிப்பூர அம்மன் மற்றும் விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட சுவாமிகள் எழுந்தருள திருவாவடுதுறை ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பராமாச்சாரிய சுவாமி மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். இன்று காவிரி ஆற்றில் ஆடிப்பூர தீர்த்தவாரி நடக்கிறது.

Tags :
× RELATED ஒரத்தநாடு அருகே பின்னையூர் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு