×

வி.கைகாட்டி தென் திருவேற்காடு கரு மாரியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் பால்குட ஊர்வலம்

அரியலூர், ஆக. 13: அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி ஜெயங்கொண்டம் மெயின் ரோட்டில் உள்ள உப்பு ஓடை அருகே தென் திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் அமைந்து உள்ளது. இக்கோயிலுக்கு ஆண்டுத்தோறும் ஆடி மாதத்தில் பக்தர்கள் பால்குடம் எடுப்பது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டுக்கான ஆடி மாத திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் விரதம் இருந்து அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும், பால்குடம் எடுத்தும் தேளுர் பாப்பாத்தியம்மன் கோயிலிலிருந்து  மேள தாளம் முழங்க ஊர்வலமாக புறப்பட்டனர். ஜி.கே.எம் நகர், வி.கைகாட்டி ஜங்சன் பகுதி வழியாக கோயிலை அடைந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் விளாங்குடி, தேளூர், காத்தான்குடிக்காடு, குடிசல், ஓரத்தூர், ரெட்டிப்பாளையம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர். ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். பொன்பரப்பி மாரியம்மன், திரவுபதி அம்மன், சாமுண்டீஸ்வரி அம்மன், செங்குந்தபுரம் மாரியம்மன், இலையூர் செல்லியம்மன், ஜெயங்கொண்டம் சாமுன்டீஸ்வரி அம்மன், மேலக்குடியிருப்பு திரவுபதி அம்மன், கங்கைகொண்டசோழபுரம் மகிஷாசுரமர்த்தினி, துர்க்கைஅம்மன் உள்ளிட்ட பல அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஜெயங்கொண்டம் கழுமைநாதர் கோயிலில் உள்ள துர்க்கை அம்மனுக்கு சிறப்பு குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. பல கோயில்களில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஏராளமானோர் அம்மனுக்கு பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். பக்தர்கள் எடுத்து வந்த பாலை அபஷேகம் செய்தனர். முன்னதாக அம்மனுக்கு 21வகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அனைத்து கோயில்களிலும் அதிக அளவில் பெண்கள் அம்மனை வழிபட்டு தரிசனம் செய்தனர்.

Tags :
× RELATED பெண்ணை தாக்கி மிரட்டிய இருவர் கைது