×

தேசிய திறனறி தேர்வில் வென்ற மாணவர்களுக்கு முனைவர் பட்டம் பெறும் வரை உதவி தொகை

காரைக்கால், ஆக.13: தேசிய திறனறி 2ம் நிலைத்தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு 11ம் வகுப்பு முதல் முனைவர் பட்டம் பெறும் வரை உதவித்தொகை வழங்கபடவுள்ளதால், செப்.9ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். என, மாவட்ட முதன்மை கல்வித்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து,  காரைக்கால் மாவட்ட முதன்மை கல்வித்துறை அதிகாரி அல்லி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பள்ளிகளிலும் தற்போது 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் திறமைமிக்கவர்களை கண்டறிந்து, அவர்களை ஊக்கப்படுத்துவதற்காக மாநில அளவிலான தேசிய திறனறி முதல் நிலைத்தேர்வு மற்றும் அரசு பள்ளி அல்லது மாநில அரசு நிதியுதவி  பெறும் பள்ளிகளில் தற்போது 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், இடைநிற்றலை தவிர்ப்பதற்கு வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை திட்டம் ஆகியன மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது.

புதுச்சேரி கல்வி இயக்ககத்தால் மாணவர்களுக்கான தேர்வு  4.11.2018 அன்று நடைபெறவுள்ளது. மாநில அளவில் தேர்வு செய்யப்படும் முதல் 10 இடங்களைப் பிடிக்கும் மாணவர்கள், தேசிய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமத்தால் 12.5.2019 அன்று தேசிய திறனறி 2ம் நிலைத் தேர்வில் பங்குபெற தகுதியுடையவராவர். இந்த தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு 11ம் வகுப்பு முதல் முனைவர் பட்டம் பெறும் வரை மத்திய அரசு உதவித் தொகை வழங்கும். மேலும், தலா ரூ. 5 ஆயிரம் மற்றும் ரூ. 10 ஆயிரம் முறையே வழங்க முதல் மற்றும் இரண்டாம் நிலைத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு ஒரு முறை மட்டும் புதுச்சேரி அரசு வழங்கும். தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தின்கீழ் காரைக்கால் பகுதியில் 23 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இவர்களுக்கு விதிகளின்படி, 9 முதல் 12-ம் வகுப்பு வரை ஆண்டுதோறும் ரூ.12 ஆயிரம் மத்திய அரசு வழங்கும். இதற்கான விண்ணப்பம், விளக்கக் கையேட்டை மாணவர்கள் schooldn.puducherry.govn.in என்ற இணையதள முகவரியிலிருந்து அந்தந்த பள்ளிகளியேயே 6.8.2018 முதல் 6.9.2018 வரை இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், அந்தந்த பள்ளி முதல்வர், தலைமையாசிரியரிடம் 6.9.2018க்குள் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED ஆட்டம் பாட்டத்துடன் நடந்த அனல் பறக்கும் பிரசாரம் ஓய்ந்தது