×

உரக்கடைகள் விடுமுறையால் ராகி விதைப்பு பணிகள் பாதிப்பு

தேன்கனிக்கோட்டை, ஆக. 13: தேன்கனிக்கோட்டையில் உரக்கடைகள் வார விடுமுறையால் ராகி விதைப்பு பணிகள் பாதிப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் நடவடிக்கை  எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் கடந்த இரு தினங்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வந்தது. ஆடி பருவத்தில் ராகி விதைப்பு பருவம்  என்பதால் மழைக்கு ஏற்பட்ட ஈரப்பதத்தை கொண்டு விவசாயிகள் நேற்று ராகி விதைப்பு பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.

தேன்கனிக்கோட்டை பகுதியில் உள்ள உரக்கடைகளுக்கு ஞயிற்றுக்கிழமை வார விடுமுறை விடுவதால் டிஏபி உரம் கிடைக்காமல் விவசாயிகள் பெரும்  சிரமத்திற்குள்ளாகினர். இதனால் ராகி விதைப்பு பணிகள் பெரிதும் பாதிப்படைந்தது. உரக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததால் டிஏபி உரம் கிடைக்காமல் விவசாயிகள் விதைப்பு  பணிகளை தள்ளி வைத்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தேன்கனிக்கோட்டை பகுதியில் ஞாயிறன்று உரக்கடைகள் விடுமுறை விடுவதால் விவசாயத்திற்கு போதிய உரம்  கிடைக்காமல் அவதிப்படும் நிலை உள்ளது.வேளாண்மை துறை அதிகாரிகள் விதைப்பு கலங்களில் தங்குதடையின்றி உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விதைப்பு காலங்களில் உரகடைகள்  விடுமுறை விடுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags :
× RELATED நாமக்கல்லை சேர்ந்த தாய் மகன் உள்பட 4 பேர் கைது