×

பண்ணைக்குட்டையில் உள்நாட்டு கலப்பின மீன் வளர்ப்பு பயிற்சி

கிருஷ்ணகிரி, ஆக.13: ஓசூர் அடுத்த பலவனப்பள்ளியில் அட்மா திட்டத்தில் பண்ணைக்குட்டையில் உள்நாட்டு கலப்பின மீன் இனங்கள் வளர்ப்பு குறித்து பயிற்சி  அளிக்கப்பட்டது. ஓசூர் வட்டார வேளாண்மைத்துறையின் மூலம் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ்(அட்மா) பலவனப்பள்ளி கிராமத்தில்  மீன்வளத்துறையில் பண்ணைக்குட்டையில் உள்நாட்டு கலப்பின மீன் இனங்கள் வளர்க்கும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு உள்மாவட்ட அளவிலான  ஒருநாள் பயிற்சி நடந்தது. முகாமில் மீன்வள மேற்பார்வையாளர் சங்கீதா பங்கேற்று, பண்ணைக்குட்டையில் கலப்பின மீன்கள் வளர்ப்பு குறித்தும், மீன்  வளர்ப்பிற்கு குளத்தை தயார் செய்யும் முறைகள் மற்றும் குளத்திற்கு உரமிடுதல், மீன்களுக்கு இரையிடுதல் மற்றும் தடை செய்யப்பட்ட மீன்களை வளர்ப்பதால்  உண்டாகும் தீமைகள் குறித்தும் விளக்கி கூறினார்.

வேளாண்மை உதவி இயக்குநர் மனோகரன், பஞ்சகாவியா, மண்புழு உரம் மற்றும் இயற்கை பூச்சி விரட்டி தயாரிக்கும் முறைகள் குறித்தும், அதை பயன்படுத்தும்  விதம் மற்றும் அதனால் ஏற்படும் பயன்கள் குறித்து விளக்கி, இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்தார். உதவி வேளாண்மை  அலுவலர் சங்கர், வேளாண்மைத்துறையில் உள்ள பல்வேறு மானியத் திட்டங்கள் மற்றும் சொட்டுநீர் பாசனத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார். அட்மா  திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுகுணா, உழவன் செயலியின் பயன்கள் குறித்து கூறி, செயல்விளக்கம் செய்து காண்பித்தார். முகாமில் 40 விவசாயிகள்  கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். முடிவில், உதவி தொழில்நுட்ப மேலாளர் மீனா நன்றி கூறினார். ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் பாண்டுரங்கன்  செய்திருந்தார்.

ஓசூர்: ஓசூர் வட்டாரத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின்(அட்மா) கீழ், கெலவரப்பள்ளி  கிராமத்தில் மீன்வளத்துறையில் பண்ணைக்குட்டையில் உள்நாட்டு கலப்பின மீன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. மீன்வள மேற்பார்வையாளர் சங்கீதா கலந்து  கொண்டு பண்ணைக்குட்டையில் கலப்பின மீன்கள் வளர்ப்பு மற்றும் மீன் வளர்ப்பிற்கு குளத்தை தயார் செய்யும் முறைகள்,  உரமிடுதல், மீன்களுக்கு  இரையிடுதல் மற்றும் தடை செய்யபட்ட அனமீன்களை வளர்ப்பதால் உண்டாகும் தீமைகள் குறித்து விளக்கி கூறினார்.

பஞ்சகாவியா, மண்புழு உரம் மற்றும் இயற்கை பூச்சி விரட்டி தயாரிக்கும் முறைகள் பற்றியும் பயன்படுத்தும் விதம், பயன்கள் குறித்தும், இயற்கை விவசாயத்தின்  முக்கியத்துவம் தொடர்பாகவும் வேளாண்மை உதவி இயக்குநர் மனோகரன் விளக்கமளித்தார். வேளாண்மைத்துறையில் உள்ள பல்வேறு மானியத் திட்டங்கள்  மற்றும் சொட்டு நீர் பாசனத்தின் முக்கியத்துவம் குறித்து உதவி வேளாண்மை அலுவலர் சங்கர் விளக்கினார். உழவன் செயலியின் பயன்கள் குறித்து அட்மா  திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுகுணா செயல்விளக்கம் செய்து காண்பித்தார். முகாமில் 40 விவசாயிகள் பங்கேற்று பயிற்சி பெற்றனர். உதவி  தொழில்நுட்ப மேலாளர் மீனா நன்றி கூறினார். ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் பாண்டுரங்கன் செய்திருந்தார்.

Tags :
× RELATED மல்லிகை பூவில் பூச்சி மேலாண்மை விளக்கம்