×

2கி.மீ தள்ளி இறக்கியதால் வாக்குவாதம் பஸ்சில் பயணம் செய்த விவசாயியை தாக்கிய டிரைவர், கண்டக்டர்

ஆலங்குடி, ஆக.13: ஆலங்குடி அருகே அரசு பேருந்தில் சென்ற விவசாயியை, அதே பேருந்தை ஓட்டிச்சென்ற டிரைவர் மற்றும் கண்டக்டர் தாக்கியதால் மயக்கமடைந்த விவசாயியை அந்த வழியாக சென்றவர்கள் ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆலங்குடி அருகேயுள்ள பாச்சிக்கோட்டையை சேர்ந்தவர் சண்முகம் (60). இவர் தனது தோட்டத்தில் விளையும் கீரைகளை அதிகாலையில் புதுக்கோட்டை மற்றும் ஆலங்குடி மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று விற்பது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் கீரையை விற்றுவிட்டு சாக்கு பையுடன் சண்முகம் புதுக்கோட்டையிலிருந்து ஆலங்குடிக்கு பேருந்து நிலையத்திற்கு வந்து இறங்கியுள்ளார். மேலும், ஆலங்குடி பேருந்து நிலையத்தில் இருந்து கறம்பக்குடி வழியாக பட்டுக்கோட்டை செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். ஆனால் பாச்சிக்கோட்டையில் டிரைவர் பேருந்தை நிறுத்தவில்லை.
இதனால் தான் இறங்கும் இடம் வந்து விட்டது பேருந்தை நிறுத்துங்கள் என்று சண்முகம் சத்தமிட்டுள்ளார். ஆனால் அதனை கண்டுகொள்ளாத பஸ்டிரைவர் பேருந்தை நிறுத்தாமல் அங்கிருந்து 2 கி.மீ தூரம் சென்று நிறுத்தி இறக்கி விட்டுள்ளனர்.

இதனால் என்னை இந்த வயதான காலத்தில் இப்படி இறக்குவிடுகிறீர்களே என்று சண்முகம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் சேர்ந்து சண்முகத்தை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் இருவரும் சண்முகத்தை காலால் உதைத்து கீழே தள்ளிவிட்டனர். இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் ஏன் வயதான முதியவரை அடிக்கிறீர்கள் என்று சத்தமிட்டுள்ளனர். இதனைதொடர்ந்து இருவரும் பேருந்தில் ஏறி சென்று விட்டனர். இருவரும் சேர்ந்து தாக்கியதால் மயக்கமான நிலையில் இருந்த சண்முகத்தை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முதியவரை தாக்கியவர்கள் பட்டுக்கோட்டை டெப்போவை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இதுகுறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...