×

ஓசூர்-சென்னை இடையே விமான சேவை நாடாளுமன்றத்தில் அசோக்குமார் எம்பி பேச்சு

கிருஷ்ணகிரி, ஆக.13: ஓசூர்சென்னை வரையில் விமான சேவை தொடங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் கிருஷ்ணகிரி  எம்பி அசோக்குமார் வலியுறுத்தினார். அவர் பேசியதாவது: ஓசூர் நகரம் தொழிற்சாலைகள் நிறைந்தது. சென்னை மற்றும் பல்வேறு மாநிலங்களுக்கு செல்ல வேண்டுமென்றால் ஓசூரிலிருந்து 83 கிமீ  தொலைவில் உள்ள தேவனஹள்ளி விமான நிலையத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. தேவனஹள்ளி விமான நிலையம் சென்றடைய 2.30 மணி நேரத்திற்கும்  மேலாகிறது. சில நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விமானத்தை தவறவிடும் சூழ்நிலை ஏற்படுகிறது.  மத்திய விமான போக்குவரத்து துறை சார்பில்,  ஓசூரில் இருந்து சென்னைக்கு அறிவிக்கப்பட்ட விமான சேவைத் திட்டத்தில், இரண்டாம் நிலை உள்ளூர் மாவட்டங்களை இணைத்து ஏழை மக்களும்  இச்சேவையை பெறும் வகையில் புதிய விமான சேவை தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

ஓசூரில் தனேஜா ஏரோஸ்பேஸ் நிறுவனத்திடம் உள்ள  விமான நிலையம் இந்த சேவையை துவங்க தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தது. அதன் காரணமாக மத்திய விமானப் போக்குவரத்துத்துறை, தமிழக  அரசுடன் பேசி விமான சேவைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, 2017ம் ஆண்டு செப்டம்பருக்குள் விமான சேவை தொடங்கப்படும் என்றும்  அறிவித்தது. ஆனால், ஓசூரிலிருந்து சென்னை வரை விமான சேவை இதுவரையில் துவங்கப்படவில்லை. எனவே, விமான சேவையை விரைந்து துவங்க மத்திய  அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags :
× RELATED 494 மதிப்பெண் பெற்ற மலை கிராம மாணவி