திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி மாரடைப்பால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு எம்எல்ஏ ஆறுதல்

தோகைமலை, ஆக.13: திமுக தலைவர் கருணாநிதி இறப்பை தாங்க முடியாமல் மாரடைப்பால் இறந்த 2 பெண்கள் உள்பட 5 திமுக தொண்டர்களின் குடும்பங்களுக்கு திமுக எம்எல்ஏ ராமர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். கரூர் மாவட்டம் குளித்தலை வடசேரியை சேர்ந்த கருப்பண்ணன், மருதூர் துரைசாமி, நெய்தலூர் தமிழ்ராணி, பனையூர் பாலமுத்து, புனவாசிபட்டி சரோஜா ஆகிய 5 பேர் திமுக தலைவர் கருணாநிதி இறப்பை தாங்க முடியாமல் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தனர். இவர்களின் குடும்பங்களுக்கு குளித்தலை தொகுதி திமுக எம்எல்ஏ ராமர் நேரில் சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் மாரடைப்பு ஏற்பட்டு மணப்பாறையில் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் ஆர்டிமலை அழகாபுரியை சேர்ந்த திமுக தொண்டர் நடராஜன் என்பவரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது புனவாசிபட்டியில் இறந்த சரோஜா என்பவர், குளித்தலை தொகுதியில் முதன் முதலாக கருணாநிதி போட்டியிட்டபோது அவருடன் சரோஜா இணைந்து வாக்குகள் சேகரித்ததார். இந்நிலையில் சரோஜாவின் தந்தை 103 வயதான சிதம்பரம்பிள்ளை என்பவரை எம்எல்ஏ ராமர் சந்தித்து அவருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் மொட்டை அடித்த அஞ்சலி செலுத்திய 50க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்களை சந்தித்து வேஷ்டி சட்டை வழங்கினார்.
அப்போது கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் உமாபதி, பொதுக்குழு உறுப்பினர் அண்ணாதுரை, விவசாய தொழிலாளர் அணி இளங்கோவன், மாவட்ட பிரதிநிதிகள் சந்திரன், காந்தி, ஊராட்சி செயலாளர் வேலாயுதம், ஜெயவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

× RELATED க.பரமத்தி ஒன்றிய பகுதியில் வடிசோறு...