×

நடவடிக்கை எடுக்க கோரிக்கை கரூர் மாவட்டத்தில் அரசின் திட்ட செயல்பாடு குறித்து கலெக்டர் ஆய்வு

கரூர், ஆக. 13:  கரூர் மாவட்டத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை ஆகிய துறைகளின் கரூர் மாவட்டத்தில் 2017-18 மற்றும் 2018-19ம் ஆண்டில் இலக்கு எய்தப்பட்ட மத்திய மற்றும் மாநில அரசு திட்ட செயல்பாடு குறித்து மாவட்ட கலெக்டர் அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார். கரூர் வட்டாரத்தில் புஞ்சை கடம்பன்குறிச்சி வருவாய் கிராமத்தில் 2017-18ம் ஆண்டு இலவச வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தின்கீழ் 86 பயனாளிகளுக்கு ரூ. 11.18லட்சம் மதிப்பில் 384 வெள்ளாடுகள் வழங்கப்பட்டுள்ளது. இவைகள் 105 குட்டிகளை ஈன்றுள்ளது. இது பயனாளிகளின் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவியாக உள்ளது என கலெக்டர் தெரிவித்தார். இதே கிராமத்தில் 2017-18ம் ஆண்டு தோட்டக்கலைத்துறையின் மூலம் பாரம்பரிய இயற்கை வேளாண்மை திட்டத்தின்கீழ் செயல்பட்டு வரும் இயற்கை முறையிலான தென்னை சாகுபடி விவசாய குழுவை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து,

திட்ட செயல்பாடுகள் மற்றும் இயற்கை முறையிலான சாகுபடி, மண்புழு உர தயாரிப்பு மற்றும் கூட்டு பண்ணை திட்டத்தின்கீழ் குழுவிற்கு வழங்கப்பட்ட பவர் டில்லர் செயல்பாடு குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்து, தென்னை நார்க்கழிவு தயார் செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும், நஞ்சை கடம்பங்குறிச்சி வருவாய் கிராமத்தில் 2017-18ம் ஆண்டு வேளாண்மைத்துறை மூலம் மண்வள இயக்க திட்டத்தின்கீழ் விவசாயிகளின் விளைநிலத்தில் மண் தன்மைகளை பரிசோதனை செய்து வழங்கப்பட்டுள்ள மண்வள அட்டைகளில் கூறப்பட்டுள்ள தகவல்களுக்கு ஏற்ப பயிர்களை பயிரிட்டு பயன்பெற வேண்டும் எனவும் கலெக்டர் ஆலோசனை வழங்கினார். ஆய்வின்போது, வேளாண்மை இணை இயக்குநர் ஜெயந்தி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் இளங்கோவன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர்கள் மோகன்ராம், கலா உட்பட அனைத்து அதிகாரிகளும் உடனிருந்தனர்.

Tags :
× RELATED கடனுதவி வழங்க விவசாயிகள் கோரிக்கை...