×

காரிமங்கலம் அருகே சஞ்சீவராயன் கோயில் கட்டுமான பணி தீவிரம்

காரிமங்கலம், ஆக.13: காரிமங்கலம் அருகே பழமை வாய்ந்த சஞ்சீவராயன் சுவாமி மலைக்கோயிலுக்கு, பொதுமக்கள் பங்கேற்று திருப்பணி வேலைகளை தொடங்கி நடத்தி வருகின்றனர்.
காரிமங்கலம் அருகே சஞ்சீவராயன் மலை உள்ளது. இம்மலை உச்சியில், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சஞ்சீவராயன் சுவாமி கோயில் உள்ளது. இந்தகோயிலில் உள்ள சுனையில் எப்போதும் நீர் வற்றுவது இல்லை. ஆடி மற்றும் புரட்டாசி, அமாவாசை நாட்களில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. அடிவாரத்தில் இருந்து சுமார் 2கி.மீ தூரம் மலை உச்சியில் உள்ள இக்கோயிலை புனரமைக்க, காட்டுசீகலஅள்ளி, மணிக்கட்டியூர், காவேரி கவுண்டர் காலனி, சின்னாண்டியூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் உதவி செய்து, அதற்கான பணிகளை தொடங்கியுள்ளனர்.

முதல் கட்டமாக கட்டுமான பொருட்களை அடிவாரத்தில் இருந்து மலை மீது கொண்டு செல்ல உதவி செய்து, சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மலை அடிவாரத்தில் இருந்து வரிசையாக, கட்டுமானப் பொருட்களை மலை மேல் கொண்டு செல்கின்றனர். இப்பணியில் ஈடுபட்டவர்களுக்கு 4 ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் சார்பாக, உணவு வழங்கப்பட்டு வருகிறது. இக்கோவில் திருப்பணிகள் பொதுமக்கள் முயற்சியுடன் விரைவில் முடித்து, கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டுள்ளதாக 4 கிராம மக்கள் மற்றும் விழாக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இத்திருப்பணிகளில் காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களும் பங்கேற்கலாம் என கோயில் திருப்பணிக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா