×

இரண்டு கும்கி யானைகள் வந்ததும் தேவாரத்தை கலக்கிய ஒற்றை யானை எஸ்கேப்

தேவாரம், ஆக. 13: தேவாரத்தை கலக்கிய ஒற்றை பெண் யானையை பிடிக்க இரண்டு கும்கி யானைகள் வந்தவுடன், ஒற்றை யானை கேரள வனப்பகுதிக்குள் எஸ்கேப் ஆகிவிட்டது.தேவாரம் மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டி உள்ள சாக்குலூத்து, சதுரங்கப்பாறை, தாழையூத்து உள்ளிட்ட இடங்களில் விவசாய நிலங்களை சேதப்படுத்திய ஒற்றை பெண் யானையால் விவசாயகிள் அச்சமடைந்தனர். சேகர் என்ற கூலிதொழிலாளியை யானை அடித்து கொன்றது. குருசாமி என்பவர் இரண்டு கால்களையும் இழந்தார்.

இதையடுத்து வனத்துறையினர் ஒற்றை யானையை பிடிக்க பொள்ளாச்சியில் இருந்து இரண்டு கும்கி யானைகளை கடந்த மாதம் 27ம் தேதி கொண்டு வந்தனர். அட்டகாசம் செய்யும் யானையை பிடிக்க தேவையான நடவடிக்கைகளில் இறங்கினர். இதற்காக மலையடிவாரத்தை ஒட்டி உள்ள தாழையூத்து என்ற இடத்தில் தனியார் தோட்டத்தில் கும்கிகளை நிறுத்தி வைத்தனர்.தினமும் மாலை 6 மணிக்கு அடர்ந்த காட்டில் இருந்து இறங்கிய ஒற்றை பெண் யானை அதிகாலை வரை பயிர்களை நாசப்படுத்தியும், குடிசைகளை சேதப்படுத்தியும் வந்தது. கும்கி யானை வந்ததது தெரிந்தவுடன் அடர்ந்த காட்டுக்குள் புகுந்து எஸ்கேப் ஆனது. இதனால் அதிர்ச்சியடைந்த வனத்துறை கடந்த 10 நாட்களாக இரண்டு குழுவாக பிரிந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஒற்றை பெண் யானை பதுங்கி இருக்கும் இடம் தெரியவந்தால் உடனடியாக அதனை பிடிப்பதற்கு தயாராக இருந்தனர். ஆனால் அது பதுங்கிய இடம் தெரியவில்லை.

இதனால் 25 பேர் கொண்ட வனக்குழுவினர் தாழையூத்திலேயே தங்கி தினமும் கேரளா-தமிழக வனப்பகுதிகளுக்குள் சென்று ஒற்றை யானையை தேடி வந்தனர்.இதனிடையே மலையடிவாரத்திற்கு பக்கத்தில் இரண்டு கும்கி யானைகளும் நிறுத்தி வைக்கப்படுவதால் இதன் வாசத்தை அறிந்து ஒற்றை யானை வராமல் இருப்பதாக வனத்துறையினருக்கு சந்தேகம் எழுந்தது. இதன் காரணமாகவும், மலையடிவாரத்தை ஒட்டி உள்ள நிலங்களில் தொடர்ந்து மலை பெய்து வருவதாலும் நேற்று முன்தினம் மாலை முதல் தேவாரம் ஊருக்குள் உள்ள அரண்மனை தோட்டத்திற்கு இரண்டு யானைகளும் வரவழைக்கப்பட்டு கட்டி வைக்கப்பட்டுள்ளன.யானைகள் இரண்டும் தற்போது 1 கிலோ மீட்டருக்கு மேல் தூரத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளதால் எப்படியும் ஒற்றையாக திரியும் பெண் யானை மலையடிவாரத்திற்குள் இறங்கும் என வனத்துறையினர் கணித்துள்ளனர்.இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘கேரள வனப்பகுதிக்குள் ஒற்றை பெண் யானை பதுங்கி இருக்கலாம் என்பதால் தினமும் தேடி வருகிறோம். வனப்பகுதிகளை ஒட்டி இரண்டு கும்கி யானைகளும் கட்டப்பட்டிருப்பதால் இது வருவதற்கு தடையாக இருக்கும் என்பதால் இதனை தற்போது ஊருக்குள் உள்ள அரண்மனை தோட்டத்தில் கட்டி வைத்துள்ளோம்’ என்றனர்.


Tags :
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு