×

தடுப்பணை தாண்டி மறுகால் பாயும் செங்குளம்

சின்னமனூர், ஆக. 13: முல்லையில் தொடர்ந்து பெருகி வரும் தண்ணீரால் செங்குளம் நிரம்பி தடுப்பணை தாண்டிய சீறி மறுகால் பாய்கிறது.சின்னமனூர் அடுத்துள்ள பூலாநந்தபுரம் கோவில் பட்டியில் 70 ஏக்கர் நிலப்பரப்பில் ஆழம் நிறைந்து நீளமான செங்குளம் இருக்கிறது. இந்த குளத்தில் தேங்கும் பாசனநீரால் நிலத்தடி மற்றும் நேரடி பாசனத்திற்கு சுமார் ஆயிரம் ஏக்கரளவில் விவசாய பயிர்களுக்கு பலன் கிடைத்து வருகிறது. குறிப்பாக சின்னமனூரிலுள்ள நான்காயிரம் ஏக்கர் வயல்வெளிகளுக்கு முல்லைப்பெரியாற்று பாசனநீர் கை கொடுத்து வருகிறது. இடையில் பாசன பற்றாக்குறை ஏற்படாதளவிற்கு மேற்படி செங்குளத்தில் தேங்கும் தண்ணீரை பகிர்ந்து சமாளித்து விவசாயம் செய்வர்.

இந்நிலையில் கடந்த காலங்களில் கரையில் சிறுகீறல்கள் இருந்ததால் திறந்து விடப்பட்ட தண்ணீர் வந்து சேர்ந்தும் சரிவர நிற்காகமல் வடிந்து ஓடிவிட்டதால் விவசாயிகள் கவலை அடைந்தனர். அதை சீரமைக்கும் விதமாக விவசாயிகளும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் உடைப்புகளை சரிசெய்தும் கரையை உயர்த்தியும் நடவடிக்கை எடுத்தனர். மேலும் அடித்தளத்தில் தண்ணீர் அரித்து விடாமல் இருக்க கருங்கல்கற்களை வைத்து சீரமைத்து தயார் செய்தனர்.
இந்நிலையில் நடப்பாண்டு முதல் போகத்திற்கு தண்ணீர் திறந்தவுடன் தற்போது செங்குளத்தில் தண்ணீர் நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது. கேரளாவில் தொடர்ந்து பெய்து வருகின்ற மழையால் முல்லைப்பெரியாற்றிலும் அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதால் செங்குளத்திலும் அதிகளவில் தண்ணீர் தேங்கி நிரம்பியதால் தடுப்பணை தாண்டி சீறி பாய்ந்து வெளியேறி கொண்டிருக்கிறது. கம்பம், குமுளி நோக்கி பஸ்களில் செல்கின்றவர்களும் சுற்றுலா செல்கின்றவர்களும் இறங்கி நின்று ரசித்து செல்கின்றனர்.

Tags :
× RELATED இடுக்கியில் இன்று பிரசாரம் நிறைவு