×

ஒரு போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் விவசாயிகள் சங்கம் கோரிக்கை

மேலூர், ஆக. 13: பெரியாறு அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால் உடனடியாக ஒரு போக பாசனப்பகுதிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஆண்டுகளை போல் இல்லாமல் இந்த ஆண்டு தண்ணீர் திறக்கப்படும் காலத்திற்கு முன்பாகவே தற்போது முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 135 அடிக்கு மேல் உள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக போதிய நீர் இல்லாமல் விவசாயம் நடைபெறாமல் உள்ள மேலூர் பகுதி மக்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அணையின் நீர் இருப்பு 6 ஆயிரம் கன அடி இருந்தாலே ஆக.15ல் ஒரு போக பாசனப் பகுதிக்கு தண்ணீர் திறக்கப் பட வேண்டும். ஆனால், தற்போது அணையில் அதை விட கூடுதலாக 9 ஆயிரம் கன அடி நீர் உள்ளது. இதனால் உடனடியாக ஆக. 15ல் ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட வேண்டும். இதனால் விவசாய பணிகள் முன் கூட்டியே துவக்க வாய்ப்புள்ளது. அடுத்து வரக்கூடிய வடகிழக்கு பருவமழையால் இத் தண்ணீருடன் சேர்ந்து 86 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் தண்ணீர் பற்றாக்குறையில்லாமல் முழுமையாக விவசாயம் செய்ய முடியும். பொதுப்பணித்துறை நிர்வாகம் உடனடியாக போர்க்கால அடிப்படையில் ஆற்றுகால்வாய்கள், நீர் வரத்து கால்வாய்களை தூர் வாரி சுத்தம் செய்ய வேண்டும். இத்துடன் மடைகளை முழுமையாக பழுது பார்க்க வேண்டும்.
மேலும் கடந்த சில ஆண்டுகளாக விளையாமல் வறட்சியாக இப்பகுதி உள்ளதால், விவசாயிகளிடம் விதை நெல் இல்லை. எனவே கூட்டுறவு சங்கங்களின் மூலம் குறைந்த விலைக்கு தரமான குறுகிய கால நெல் விதைகள், உரம், பூச்சி மருந்துகள் தட்டுபாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.


Tags :
× RELATED ரயில்வே ஸ்லீப்பர் கட்டை தயாரிக்க 2,830...