×

போலீஸ் - ஆர்டிஓ அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மதுரை, ஆக.13: மதுரையில் நம்பர் பிளேட்களில் கண்டபடி ‘ஸ்டைலாக’ எழுதியும், ஏதேதோ ‘ஓவியங்களை’ வரைந்து வைத்தும் இயக்கப்படும் வாகனங்கள் மீது போலீசாருடன், ஆர்டிஓ அதிகாரிகளும் இணைந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.நாட்டில் ஒவ்வொரு வாகனமும் கட்டாயம் பதிவு செய்யப்படுகிறது. அப்போது இதற்கென பதிவெண் வழங்குகின்றனர். வாகனத்தின் முன்னும், பின்னும் எழுதி வைக்கிற இந்த பதிவு எண் மூலம் வாகனம் திருடுபோனால் தேடிப்பிடிக்கலாம். விபத்து காலத்தில் அடையாளம் தெரியலாம். பதிவு எண்ணுக்கு முன்னால் வாகனம் பதிவு செய்யப்பட்ட மாநிலத்தின் பெயரும், அந்த வாகனம் பதிவு செய்யப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலக எண்ணும் குறிப்பிடப்படுகிறது. உதாரணமாக தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டால், தமிழ்நாடு என்பதை சுருக்கமாக ஆங்கிலத்தில் ‘டிஎன்’ என்றும், தொடர்ந்து மதுரை வடக்குவட்டார போக்குவரத்து அலுவலகம் என்றால் ‘59’ என்றும் எழுதுகிறோம். தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கு முன்பு மதுரை மாவட்ட வாகனங்களுக்கு ‘எம்டியு’ என்ற பெயருக்குப்பின்னால் எண் கொடுக்கப்பட்டது. இதில் ‘எம்’ என்பது ‘மெட்ராஸ்’ என்பதைக் குறித்தது. தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கு பிறகு ‘டிஎன்யு’ என்று மதுரை மாவட்ட வாகனங்களுக்கு முன்னால் பெயர் தரப்பட்டது. தற்போது ‘டிஎன்’ என்றே சுருக்கப்பட்டிருக்கிறது.

1989ம் ஆண்டு மத்திய மோட்டார் வாகன விதி 50 மற்றும் 51ன் படி அனைத்து வாகனங்களிலும் பதிவு எண்(நம்பர் பிளேட்) பொருத்தப்பட்டிருக்க வேண்டும். இதன்படி, டூவீலருக்கு முன்புறம் 45மி.மீ உயரம், 285 மி.மீ அகலம். எழுத்து மற்றும் எண்கள் 30 மி.மீ உயரம், 5 மி.மீ தடிமனுடன் 5 மி.மீ இடைவெளியில் இருக்க வேண்டும். பின்புறம், 100மி.மீ உயரம், 200மி.மீ அகலம், எழுத்து 35 மி.மீ உயரம், 7மி.மீ தடிமனுடன் 5மி.மீ இடை வெளி இருக்க வேண்டும். கார் மற்றும் 4 சக்கர வாகனம்: முன் மற்றும் பின்புறம், 120மி.மீ உயரம், 500மி.மீ அகலம், எழுத்து மற்றும் எண்கள் 65மி.மீ உயரம், 10மி.மீ தடிமனுடன் 10 மி.மீ இடைவெளி இருக்க வேண்டும்.வாடகை வாகனங்களில் பிளேட்டுகள் மஞ்சள் பின்புறத்தில் கறுப்பு நிறத்தில் எழுத வேண்டும். சொந்த வாகனங்களில் வெள்ளை பின்புறத்தில் கறுப்பு நிறத்தில் எழுத்துக்கள் இருக்க வேண்டும். இப்படி வாகனங்களுக்கு ஏற்ப வகைப்படுத்தப்பட்டுள்ளன.

சமூக ஆர்வலர் காசீம் கூறுகையில், ‘மத்திய மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகளின் கீழ் மட்டுமே நம்பர் பிளேட்டுகள் அமைத்து, அதில் உரிய அளவில், வடிவத்தில் மட்டுமே இப்படி எண்களை எழுத வேண்டும். ஆனால் விதவிதமான ‘பான்ட்’(எழுத்துருக்களை) பயன்படுத்தி வேறுபட்ட வண்ணங்களில், எண்கள் எழுதப்படுகிறது. ஓவியங்கள், பொம்மைகள், புகைப்படங்கள் என விதவிதமான வடிவங்களை இந்த நம்பர் பிளேட்டுகளில் ஒட்டி வைக்கின்றனர். ‘போலீஸ்’, ‘பிரஸ்’ துவங்கி, ‘தாலுகா ஆபீஸ்’ வரை தங்களை அடையாளப்படுத்தும் விதம் பதவிகளை எழுதி வைத்தும், கட்சிக் கொடிகள், பதவிகள், சின்னங்களை வரைந்தும் மிரட்டுகின்றனர். இந்த விதிமீறல்கள் மீது போலீஸ், போக்குவரத்து அதிகாரிகள் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், இதில் அதிகாரிகள் கூடுதல் கவனம் காட்டாதது, மதுரையில் எங்கும் நம்பர் பிளேட்டுகளை வாகன ஓட்டிகள் ஒரு தகவல் பலகையாகவே பயன்படுத்தும் வகையில் மாறியுள்ளது. இதில் போலீஸ், ஆர்டிஓ இணைந்த கடும் நடவடிக்கை அவசியம் வேண்டும்’ என்றார்.

Tags :
× RELATED கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை