×

மறுகால்குறிச்சி ஊராட்சியில் வீதிகளில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரகேடு

நாங்குநேரி, ஆக. 13: மறுகால்குறிச்சியில் முறையான பராமரிப்பின்றி தேங்கிநிற்கும் கழிவுநீரால் தொற்று நோய்  பரவும் அபாயம் நிலவுகிறது.நாங்குநேரி ஒன்றியம், மறுகால்குறிச்சி கிராம ஊராட்சியில் மறுகால்குறிச்சி, இளந்தோப்பு, நம்பிநகர்,அப்துல்காசீம்நகர், பெருமாள் தோப்பு பசும்பொன்நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 1500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள வீதிகளில்  கட்டப்பட்ட கழிவுநீரோடைகள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை. பல மாதங்களாக சுத்தம் செய்யப்படாத இந்த கழிவுநீரோடைகளில் கட்டிடக் கழிவுகள், மண், மக்காத தீங்கு  விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் ஆக்கிரமிப்பால் உருவான அடைப்பால் கழிவுநீர் செல்வது தடைபட்டுள்ளது. இதனால் வீதிகளில் தேங்கிநிற்கும் கழிவுநீரால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இதில் உருவாகும் ஏராளமான கொசுக்களின் இளம்புழுக்கள் நௌிந்து சுகாதார கேட்டை ஏற்படுத்தியுள்ளன. இதனால் இப்பகுதி மக்கள் இரவில் நிம்மதியான தூக்கத்தை இழந்து தவிக்கின்றனர்.

 இதுகுறித்து ஊராட்சி ஆணையரிடம் முறையிட்டபோதும் அதை கண்டுகொள்ளாத அதிகாரிகள், எப்போதோ நடந்த கழிவுநீரோடை சுத்தம் செய்யும் பணியின் எடுக்கப்பட்ட செல்போன் காட்சிகளை ஆணையரிடம் பணிகளை மேற்கொண்டு முடித்து விட்டதாக தெரிவித்துள்ளதாக  மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதேபோல் பல  பணிகளை பதிவேடுகளில் முறையாக முடித்தது போல அதிகாரிகள் பொய்யாக பதிவேற்றம்  செய்துவருவதாகவும் அப்பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, இதுவிஷயத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டு தவறுகள் செய்த அதிகாரிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் (45) கூறுகையில். ‘‘எங்கள் ஊரில் பல மாதங்களாக கழிவுநீரோடைகள் மருந்துக்குக்கூட சுத்தம் செய்யப்படாமல் இருந்து வருகின்றன. கடந்த மாதம் ஐயன்கோவில் கொடைவிழா பெரிய அளவில் நடந்தது. இதையொட்டி முனகூட்டியே ஊராட்சி செயலாளரிடம் கழிவு நீரோடையை சுத்தம் செய்ய கோரிக்கை விடுத்தோம். ஆனால், யாரும் சுத்தம் செய்ய முன்வரவில்லை. இதனால் வீதிகளில் தேங்கிநிற்கும் கழிவுநீரால் வீசிய கடும் துர்நாற்றத்திற்கிடையே ஏராளமான உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கொடை விழாவுக்காக எங்கள் வீடுகளுக்கு வந்து சென்றனர். இதனால் எங்களுக்கு பெருத்த அவமானமும், சுகாதாரக் கேடும் எற்பட்டுள்ளது. அதன் பின்னர் ஒன்றிய ஆணையரிடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை இல்லை’’ என்றார்.

 இதனிடையே அண்மையில் பெய்த மழையால் பெருக்கெடுத்த தண்ணீரும், தற்போது கழிவுநீரோடு கலந்து தேங்கி நிற்பதோடு அங்குள்ள பொது குடிநீர் குழாயில் கலந்துவருவதாலும் இங்கு காய்ச்சல் வாந்தி பேதி போன்ற தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனியாவது இதுவிஷயத்தில் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.


Tags :
× RELATED மனைவியை தாக்கிய கணவர் கைது