×

கடையம் அருகே இரவில் பாராக மாறும் பயணிகள் நிழற்குடை

கடையம், ஆக. 13: கடையம் அருகே பயணிகள் நிழற்குடை இரவில் குடிமகன்களின் மதுபானக்கூடமாக மாறுவதால் கிராம மக்கள் கடுமையாக அவதிப்படுகின்றன.கடையம் ஒன்றியம், திருமலையப்பபுரம் ஊராட்சிப் பகுதியில் அம்பை- தென்காசி சாலையில்  பள்ளி அருகே பயணிகள் நலன்கருதி நிழற்குடை ஒன்று அமைக்கப்பட்டது. இதை திருமலையப்பபுரம், ரவணசமுத்திரம், வீராசமுத்திரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்திவந்தனர். பள்ளி நாட்களில் தினமும் அருகேயுள்ள பள்ளிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் இந்த நிழற்குடையை பயன்படுத்தி வருவதோடு பல்வேறு பணிகளுக்கு செல்வோர் இதை பயன்படுத்தி வந்தனர்.

 ஆனால், முறையான பராமரிப்பின்றி கடந்த சில மாதங்களாக இரவு நேரத்தில் இந்த பயணிகள் நிழற்குடையானது மதுபிரியர்களின் மதுபானக்கூடமாக மாறி விடுகிறது. இரவு நேரங்களில் இங்கு தங்களுக்குத் தேவையான மதுபாட்டில்களை வெளியில் வாங்கிவரும் குடிமகன்கள், இங்கேயே அமர்ந்து குடித்து கும்மாளமிடுகின்றனர். பயன்படுத்திய பிறகு போதை தலைக்கேறியதும் குடித்துமுடித்த மதுபாட்டில், வாட்டர் பாக்கெட் ஆகியவற்றை நிழற்குடையில் பயணிகள் அமறும் இருக்கையிலேயே வீசிச் செல்கின்றனர்.
இதனால் பயணிகள் இருக்கையில் அமர முடியாமலும், மழை நேரங்களில் ஒதுங்க முடியாமலும் அவதிப்படும் அவலம் தொடர்கிறது. அத்துடன் மதுபிரியர்கள் உடைத்துபோட்டு செல்லும் மதுபாட்டில்களின் கண்ணாடி துண்டுகள் பஸ்சை எதிர்பார்த்து காத்திருக்க வரும் பள்ளி மாணவ, மாணவிகளின் கால்களையும் பதம் பார்க்கின்றன. அத்துடன் பயணிகள் நிழற்குடையே அலங்கோலமாக மாறுவதோடு துர்நாற்றமும் வீசுவதால்  இங்கு வரும்  கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் முகத்தை சுளித்தவாறு சாலையிலேயே காத்து கிடந்து பஸ் ஏறி செல்கின்றனர்.எனவே, இதற்கு நிரந்தரத் தீர்வு காண காவல் துறையினர் இரவு நேரத்தில் இப்பகுதியில் ரோந்து சென்று நிழற்குடையை மதுபானக்கூடமாக பயன்படுத்தும் மதுப்பிரியர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும். இதுவே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags :
× RELATED திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயிலில் வசந்த உற்சவம்