×

குலசேகரன்பட்டினத்தில் பராமரிப்பின்றி சிதிலமடைந்த அரசு மருத்துவமனை கட்டிடம்

உடன்குடி, ஆக.13: குலசேகரன்பட்டினத்தில் பராமரிப்பின்னி சிதிலமடைந்த அரசு மருத்துவமனை கட்டிடங்களை உடனே சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பண்டைகாலத்தில் இயற்கை துறைமுகமாக குலசேகரன்பட்டினம் செயல்பட்டது. அதற்கு சான்றாக சுங்கத்துறை அலுவலகம், வழிகாட்டி தூண், பெரிய அளவிலான குடோன்கள் இன்றளவும் உள்ளன. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதிலும் உடன்குடி, குலசேகரன்பட்டினம் பகுதிமக்களின் பங்கு பெரிதாகும். இவ்வாறு புகழ் பெற்ற குலசேகரன்பட்டினத்தில் சுமார் 75ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அரசு மருத்துவமனை மூலம் பொதுமக்கள் பயன்பெற்று வந்தனர். அந்த காலத்தில் பெரிய அரசு மருத்துவமனையாக செயல்பட்டது என்பதை குறிக்கும் வண்ணம் பிரேத பரிசோதனை கூட ஆய்வுகூடம் இருந்துள்ளது.

தற்போது மணப்பாடு, சிறுநாடார்குடியிருப்பு, மாதவன்குறிச்சி, தாண்டவன்காடு, குலசேகரன்பட்டினம், கல்லாமொழி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள குக்கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பழைய காலத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தில் இன்றளவும் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அந்த கட்டிடத்தின் பெரும்பாலான பகுதிகள் பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. சுண்ணாம்பு கற்களினால் கட்டப்பட்ட சுவரில் பெரிய அளவில் விரிசல் காணப்படுகிறது. இதனால் அரசு மருத்துவமனைக்கு செல்லவே பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.

குலசேகரன்பட்டினம் கோவில் நகரம் என்பதால் செவ்வாய், வெள்ளி மட்டுமின்றி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் இன்னும் ஒரு மாதத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் தசரா திருவிழா நடைபெற உள்ளது. திருவிழா மற்றும் ஏனைய நாட்களில் வெளியிடங்களில் இருந்து  வரும் பக்தர்கள் தங்களின் உடலில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் முதலுவி சிகிச்சை பெற இங்கு தான் வரவேண்டும். ஆனால் அங்கு பணியாற்றும் ஊழியர்களே அச்சத்துடனே பணியாற்றிட வேண்டிய நிலைதான் உள்ளது. கட்டிடங்கள் சிதிலமடைந்து, விரிசல் ஏற்பட்டும், மேல்பகுதி உடைந்தும் காணப்படுவதால் மழைக்காலங்களில் மழைநீர் அதிகளவில் மருத்துவமனைக்குள் வந்து விடுகிறது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் உடனே தலையிட்டு ஏதேனும் விபரீதம் நிகழும் முன் சிதிலமடைந்து காட்சியளிக்கும் குலசேகரன்பட்டினம் அரசுமருத்துவமனை கட்டிடங்களை அப்புறப்படுத்தி, புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED புத்தன்தருவை கூட்டுறவு சங்கத்தின் வளர்ச்சி நிதி வழங்கல்