×

கோவில்பட்டியில் சாலை விரிவாக்கத்திற்காக அகற்றப்பட்ட நிழற்குடை மீண்டும் அமைக்கப்படுமா?

கோவில்பட்டி, ஆக.13: கோவில்பட்டியில் சாலை விரிவாக்கத்திற்காக பயணிகள் நிழற்குடை அகற்றப்பட்டதால்
பயணிகள் கடும் வெயிலில் காத்திருக்க வேண்டியுள்ளது. விரைவில் பயணிகள் நிழற்குடை அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கோவில்பட்டி நகரில் எட்டயபுரம் வளைவு ரோடு சந்திப்பு கால்நடை மருத்துவமனைக்கு எதிரே மெயின்ரோட்டில் பயணிகள் நிழற்குடை இருந்தது. இந்நிலையில் இந்த சாலை விரிவாக்க பணியின்போது, பயணிகள் நிழற்குடை அகற்றப்பட்டது. சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு பல மாதங்களாகியும் அகற்றப்பட்ட நிழற்குடைக்கு பதிலாக புதிதாக அமைக்கப்படாமலேயே
உள்ளது. இந்த வழியாக கோவில்பட்டியில் இருந்து தூத்துக்குடி, அருப்புக்கோட்டை, விளாத்திகுளம், திருச்செந்தூர், ராமேஸ்வரம் போன்ற ஊர்களுக்கு அரசு, தனியார் பஸ்களும், சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு அரசு டவுண்பஸ் மற்றும் மினிபஸ்களும் செல்கின்றன. இதனால் பஸ்கள் அனைத்தும் இங்கு நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன.

கிராமப்புற பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களும் இந்த நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பயணிகள் நிழற்குடை இல்லாததால், பெண்கள், முதியோர், பள்ளி மாணவர்கள் கடும் வெயிலில் கால்கடுக்க நின்று பஸ்களில் ஏறி செல்கின்றனர். இப்பகுதியில் போதிய கடைகளும் இல்லாததால் நிழலுக்கு ஒதுங்க கூட இடமில்லாமல் வெயிலில் பயணிகள் நிற்கின்றனர். கோடை வெயிலுக்கு முன்பாகவே அகற்றப்பட்ட இடத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED இளையரசனேந்தலில் சுமை தூக்கும் தொழிலாளர் சங்க பெயர் பலகை திறப்பு