×

கோவில்பட்டியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி

கோவில்பட்டி, ஆக.13: கோவில்பட்டியில் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வடிவமைக்கும் பணிகளில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து, சிறப்பு பூஜைகள் நடத்தி, வேன், ஆட்டோக்களில் சிலைகளை ஊர்வலமாக கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைக்கப்படும்.  இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி செப்.13ம் தேதி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் ஒரு மாதங்கள் உள்ள நிலையில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை வடிவமைக்கும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கோவில்பட்டி இளையரசனேந்தல் மெயின்ரோடு பகுதியில் உள்ள தனியார் இடத்தை வாடகைக்கு பிடித்து ராஜஸ்தானைச் சேர்ந்த தொழிலாளர்கள் விநாயகர் சிலைகளை வடிவமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஜிப்சம் மாவு கரைசலை கொண்டு 2 முதல் 8 அடிக்கு மேலான விநாயகர் சிலைகளை தத்ரூபமாக வடிவமைத்து வருகின்றனர். இவை ரூ.100 முதல் ரூ.10 ஆயிரம் விலை நிர்ணயித்துள்ளனர். சிலைகளில் வடிவமைத்து பல்வேறு வண்ணங்களை பூசும் பணியில் தொழிலாளர்கள் குடும்பத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஆஷாத் கூறுகையில்; ராஜஸ்தானில் இருந்து ஏராளமான குடும்பத்தினர் தமிழ்நாட்டில் மதுரை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி போன்ற பல்வேறு ஊர்களில் குழுக்களாக பிரிந்து விநாயகர் சிலைகளை வடிவமைத்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறியது முதல் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை பல்வேறு வண்ணங்களில் வடிவமைத்து உயரத்திற்கேற்ப விலைகளில் விற்கிறோம் என்றார்.

Tags :
× RELATED சாலை வளைவில் அபாய பள்ளம் சீரமைப்பு