×

அண்ணாமலையார் கோயிலில் இன்று பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நள்ளிரவு தீமிதி விழா நடைபெறுகிறது

திருவண்ணாமலை, ஆக.13: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று, ஆடிப்பூர பிரமோற்சவ நிறைவை யொட்டி, பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடக்கிறது. மேலும், நள்ளிரவு தீமிதி விழாவும் நடைபெற உள்ளது.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிப்பூர பிரமோற்சவம் மிகவும் பிரசித்தி பெற்றது. அதன்படி, இந்த ஆண்டு ஆடிப்பூர பிரமோற்சவம் கடந்த 4ம் தேதி உண்ணாமுலையம்மன் சன்னதி எதிரில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 10 நாட்களாக தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் மேளதாளம் முழங்க விநாயகர், பராசக்தி அம்மன் மாடவீதியில் பவனிவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இந்நிலையில், ஆடிப்பூர பிரமோற்சவத்தின் நிறைவாக இன்று (திங்கட்கிழமை) காலை கோயில் வளாகத்தில் அமைந்துள்ள சிவகங்கை தீர்த்தக்குளத்தில் பராசக்தி அம்மனுக்கு தீர்த்தவாரி நடக்கிறது. பின்னர், மாலை 6 மணியளவில் பெரியநந்தி அருகே உள்ள வளைகாப்பு மண்டபத்தில் அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடைபெறுகிறது.தொடர்ந்து இன்று இரவு காமதேனு வாகனத்தில் பராசக்தியம்மன் மாடவீதியில் மேளதாளம் முழங்க வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். மேலும், அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் விசேஷ நிகழ்வான ஆடிப்பூர தீமிதி விழா இன்று நள்ளிரவு 12 மணியளவில் உண்ணாமுலையம்மன் சன்னதி எதிரில் நடக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். விழா ஏற்பாடுகளை அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் ஞானசேகர் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags :
× RELATED இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான...