×

திருவண்ணாமலையில் துணிகரம் தலைமை காவலர் வீட்டில் 10 சவரன், ₹15 ஆயிரம் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலை

திருவண்ணாமலை, ஆக.13: திருவண்ணாமலையில் தலைமை காவலர் வீட்டில் 10 சவரன் நகை மற்றும் ₹15 ஆயிரம் பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.திருவண்ணாமலை வேங்கிக்கால் அண்ணாமலை நகரை சேர்ந்தவர் அசோக்(39). இவர் செங்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கலையரசி(37). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் வழக்கம்போல் அசோக் வேலைக்கு சென்றுவிட்டார். குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை என்பதால், கலையரசி வீட்டை பூட்டிவிட்டு குழந்தைகளுடன் செங்கத்தில் உள்ள தனது தாய்வீட்டிற்கு சென்றார். இரவு பணி முடிந்ததும் அசோக் காவலர் குடியிருப்பிலேயே தங்கினார்.

இந்நிலையில், நேற்று காலை அசோக் வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அசோக்கிற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அசோக் வீட்டிற்கு விரைந்து வந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்து பீரோ கருங்கல்லால் தாக்கி உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தது. மேலும், பீரோவில் இருந்த 10 சவரன் நகைகள் மற்றும் ₹15 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், டிஎஸ்பி அண்ணாதுரை, போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களை வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மேலும், இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிந்து மர்ம ஆசாமிகளை தேடிவருகின்றனர்.திருவண்ணாமலையில் போலீசின் வீட்டிலேயே மர்ம ஆசாமிகள் கைவரிசை காட்டியிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
× RELATED திமுக ஒன்றிய செயலாளர், அதிமுக மாவட்ட...