×

கருகரு கூந்தலுக்கு 2 டிப்ஸ்!

நன்றி குங்குமம் டாக்டர்

அடர்த்தியான கூந்தல் இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் கருமையான கூந்தல் இருப்பது அழகு தான். ஆனால் தற்போது மன அழுத்தம், மாசு, தூசி, கெமிக்கல் நிறைந்த எண்ணெய் மற்றும் ஷாம்பூ பயன்படுத்துவதால் முடி உதிர்வு, இளநரை, வழுக்கை விழுவது போன்றவை அனைவருக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறியுள்ளது. இதனை வீட்டிலேயே தயாரிக்கும் இயற்கை எண்ணெய் கொண்டு சரி செய்ய முடியும். அதுகுறித்து இங்கு காண்போம்.

ஆலிவ் பாதம் எண்ணெய்

தேவையான பொருட்கள்

ஆலிவ் எண்ணெய் - 100 மி
பாதாம் எண்ணெய் - 50 மி
ஆமணக்கு எண்ணெய் - 30 மி
செம்பருத்தி இலை - 5
நெல்லிக்காய் சாறு - 30 மி
வேம்பு இலைகள் - 20.

செய்முறை

ஒரு கனமான வாணலியை எடுத்துக் கொள்ளவும். அதில் ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், செம்பருத்தி இலைகள் , நெல்லிக்காய் சாறு , வேம்பு இலைகள் ஆகியவற்றை ஒன்றாக போட்டு நன்கு கலந்து அடுப்பில் வைத்து சூடாக்கவும். நன்கு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து ஆறவைத்து வடிகட்டவும். இப்போது அதை ஒரு பாட்டிலில் சேமித்து தினமும் பயன்படுத்தலாம். இந்த எண்ணெயை தேய்த்து வந்தால் கூந்தல் நன்கு அடர்த்தியாக வளரும்.

இந்த எண்ணெயில் உள்ள நன்மைகள்:

ஆலிவ் எண்ணெய் தலைமுடி உதிர்வதைத் தடுத்து, முடியின் வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது. குளிர்காலத்தில் தலைமுடியில் வெடிப்புக்கள், வறட்சியை நீக்க ஆமணக்கு எண்ணெய் பயன்படுகிறது.பாதாம் எண்ணெயில் விட்டமின் ஈ நிறைந்திருப்பதால் இது முடி உதிர்வைத் தடுக்கிறது. மேலும் இது ஒரு நல்ல ஆக்சிஜனேற்றியாக இருப்பதால், பாதிப்படைந்த முடிகளை சீர் செய்ய பயன்படுகிறது.

செம்பருத்தி இலை முடியை பட்டுப்போன்று மென்மையாக மாற்றிவிடும். பேன், கூந்தல் உதிர்வு பிரச்னைகளை சரி செய்யவும் துணை புரிகிறது. நெல்லிக்காயில் உள்ள விட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்கள் போன்ற பண்புகள் கூந்தல் வளர்ச்சியை தூண்டுவதில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இது கூந்தல் வளர்ச்சியை தூண்டி நரைமுடி, கூந்தல் உதிர்தல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கிறது.

மால்ஸ்சேசியா என்ற பூஞ்சையால் ஏற்படும் பொடுகு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேம்பு நல்ல பலனை தருகிறது. இதிலுள்ள அசாடிராக்டின் எனப்படும் மூலப்பொருள் பொடுகை அறவே நீக்க உதவுகிறது. எனவே இந்த எண்ணெயை தினமும் தேய்த்து அடர்த்தியான கூந்தலை பெறுங்கள்.

ஆர்கானிக் எண்ணெய்ஆர்கானிக் எண்ணெய்

தேவையான பொருட்கள்

தேங்காய் எண்ணெய் - 250 மி
நல்லெண்ணெய் - 50 மி
கரிசலாங்கண்ணி இலைகள் - ஒரு கைப்பிடி
சின்ன வெங்காயம் - 10
செம்பருத்தி இலை - 1 கைப்பிடி
கறிவேப்பிலை - 1 கைப்பிடி
கருஞ்சீரகம் - 1 ஸ்பூன்
மருதாணி - 1/2 கைப்பிடி
நெல்லிக்காய் - 5
வெந்தயம் - 1 ஸ்பூன்
கற்றாழை - 1 இதழ்.

செய்முறை

மேலே குறிப்பிட்டுள்ள எண்ணெயை தவிர பிறவற்றை ஒவ்வொன்றாக அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயை ஊற்றி மிதமாக சூடானதும் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்கு கலக்கவும். அடிபிடிக்காமல் இருக்க பொறுமையாக சிறிது நேர இடைவெளியில் கிளறிக் கொண்டே இருக்கவும். நுரை அடங்கும் வரை காய வைத்து இறக்கி ஆற விடவும்.இப்போது எண்ணெய் நன்கு கரும்பச்சை நிறத்தில் இருக்கும். இதனை பாட்டிலில் சேகரித்து தினமும் பயன்படுத்தி வர கூந்தல் நன்கு வளர்ந்து இளநரை உள்ளிட்ட பிரச்னைகள் நீங்கும்.

குறிப்பு:
சளி பிடிக்கும் பிரச்சனை இருப்பவர்கள் கற்றாழை பயன்படுத்துவதை தவிர்த்து விடவும்.

தொகுப்பு : சரஸ்

Tags :
× RELATED அனஸ்வரா ராஜன் ஃபிட்னெஸ்