×

மாலையில் படியுங்கள் சதுரகிரி, இருக்கன்குடி ஆடி அமாவாசை திருவிழா : வாகனம் நிறுத்தும் இடம் அறிவிப்பு

விருதுநகர், ஆக. 9:  சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மற்றும் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடி அமாவாசை திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விருதுநகர் மாவட்ட எஸ்பி ராஜராஜன் வெளியிட்டுள்ள தகவல்:
சதுரகிரிக்கு வரும் வாகனங்கள் இலவசமாக நிறுத்துமிடங்கள்: மதுரை, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி பகுதிகளில் இருந்து வரும் டூவீலர் மற்றும் நான்குசக்கர வாகனங்களை, அழகாபுரி சந்திப்பிலிருந்து தம்பிபட்டி, மகாராஜாபுரம், தாணிப்பாறை விலக்கு வழித்தடத்தில் லயன்ஸ் ஸ்கூல் அருகே நிறுத்தலாம். ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், சிவகாசி பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் கிருஷ்ணன்கோவில் சந்திப்பில் இருந்து சேசபுரம், கோபாலபுரம், வத்திராயிருப்பு, நொண்டியம்மன்கோயில் தெரு சந்திப்பு, பிள்ளையார்கோயில் சந்திப்பு, சேதுநாராயணபுரம், தாணிப்பாறை விலக்கு வழியாக கிழக்கு, மேற்கில் உள்ள பெரியகருப்பன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் நிறுத்த வேண்டும்.

மேலும், ராம்நகர் வாகன நிறுத்துமிடம் மற்றும் சர்வோதயா கார்பேஜ் வாகன நிறுத்துமிடங்களில் டூவீலர்களும், அமச்சியார் அம்மன் கோயில் மற்றும் பிள்ளையார் கோயில் பகுதியில் நான்குசக்கர வாகனங்களும் நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவூத்திற்கு வரும் வாகனங்களுக்கு தனியாக மாவூத்திலும் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர தாணிப்பாறை விலக்கு பஸ்நிலையம், சிவசங்கு மடம் பஸ்நிலையம் மற்றும் ராம்நகர் பஸ்நிலையம் (மினிபஸ்) ஆகிய மூன்று இடங்களில் தற்காலிக பஸ்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தாணிப்பாறையிலிருந்து சதுரகிரி மலையேற அதிகாலை 4 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படுவர். மற்ற நேரங்களில் தாணிப்பறை வருவதை தவிர்க்க வேண்டும். குற்றச்சம்பவங்களை கண்காணிக்க சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு 1065 போலீசார் தொடர் காண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. தாணிப்பாறையில் காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் விழா:
ஆடி கடைசி வெள்ளி திருவிழாவை முன்னிட்டு ஆக.9 முதல் 11ம் தேதி வரை இலவச வாகன நிறுத்துமிடங்கள்: கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவில்பட்டி, சங்கரன்கோவில், மதுரை, சாத்தூர் வழியாக வரும் பஸ்கள் மேற்கு பஸ்நிலையத்திற்கு வந்து அதே மார்க்கமாக செல்ல வேண்டும். தூத்துக்குடி, அருப்புக்கோட்டை, விளாத்திகுளம், நென்மேனி வழி பஸ்கள் கிழக்கு பஸ்நிலையம் வந்து அதே பாதையில் செல்ல வேண்டும்.   
அம்மன் பெட்ரோல் பங்க் அருகில் நான்குசக்கர வாகனங்கள், பனந்தோப்பு அருகில் டூவீலர்கள் இலவசமாக நிறுத்தி எடுக்க வேண்டும். சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டு 860 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மதுபான விற்பனை தடை செய்யப்பட்டு, கோயில் அருகில் 24 மணி நேரம் செயல்படும் காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED சென்னை சாம்பியன் வென்றது மாநில அளவிலான குத்துச்சண்டை