×

காவிய நாயகனுக்கு கண்ணீர் அஞ்சலி

விருதுநகர், ஆக. 9: திமுக தலைவர் கலைஞர் மறைவையொட்டி, மாவட்டத்தில் திமுகவினர் மொட்டை போட்டு அஞ்சலி செலுத்தினர். அரசு விடுமுறை விடப்பட்ட நிலையில் ஆட்டோ, வேன், கார், லாரிகள் ஓடாதால் பஸ்நிலையங்கள் வெறிச்சோடின. திமுக தலைவர் கலைஞர் உடல்நலிவினால், சென்னை காவேரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் மாலை 6.10 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவைக் கேட்டு கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். மாவட்டத்தில் அனைத்து கிராமங்கள், நகரங்களில் வீடுகள், கடைகள் முன்பாக கலைஞர் படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்கள் மரியாதை செலுத்தினர். நூற்றுக்கணக்கான அமைப்புகள், மாற்றுக்கட்சியினர், சங்கங்கள், தனிமனிதர்கள் சார்பில் நகரங்கள் முழுவதும் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. கலைஞரின் கட்அவுட்களை வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நேற்று முன்தினம் மாலை முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தமிழக அரசு 7 நாள் துக்கம் அனுசரித்து, நேற்று அரசு விடுமுறை அறிவித்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் நேற்று விடுமுறை விடப்பட்டன. அனைத்து நகரங்களிலும் பஸ்கள், லாரிகள், ஆட்டோ, வேன், லோடுவேன்கள் என அனைத்து வாகன போக்குவரத்தும் நிறுத்தப்பட்டன. பெட்ரோல் பங்குகள் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி மூடப்பட்டன. திரையரங்குகளில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. போக்குவரத்து நிறுத்தம், அரசு விடுமுறையால் மாணவ, மாணவியர், பொதுமக்கள் வீடுகளில் முடங்கியதால் வீதிகள், சாலைகள் வெறிச்சோடின. வணிகநகரான விருதுநகரில் பரபரப்பாக இயங்கும்  மார்க்கெட் நேற்று விடுமுறை விடப்பட்டது. விருதுநகர் மெயின்பஜார், காசுக்கடை பஜார், தெப்பபஜார் பகுதிகள், பழைய, புதிய பஸ் நிலையங்கள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடந்தன. போக்குவரத்து முடங்கியதால் நான்குவழிச்சாலைகள் முதல் கிராமச் சாலைகள் வரை போக்குவரத்து இன்றி வெறிச்சோடி கிடந்தது.
காரியாபட்டி, அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், வத்திராயிருப்பு என மாவட்டத்தில் நகரங்கள், கிராமங்களும் வெறிச்சோடின. அத்தியவாசிமான பால், மருந்து கடைகள் மட்டும் திறந்திருந்தன.

மாவட்டம் முழுவதும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க 2 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் மக்கள் கூடும் இடங்களில் விடிய, விடிய கண்காணிப்பு பணியில் இருந்தனர். ராஜபாளையம்: திமுக தலைவர் கருணாநிதி மறைவையொட்டி ராஜபாளையத்தில் அண்ணா சிலை அருகே, மாநில பொதுக்குழு  உறுப்பினர்  உதயசூரியன் தலைமையில் திமுகவினர் இன்பராஜ், மாரிமுத்து,  பாண்டி, பிரகாஷ்  ஆகியோர் மொட்டை போட்டு அஞ்சலி செலுத்தினர். இதேபோல, நகரின் 12 மற்றும்  13வது வார்டில் திமுகவினர் மதிவாணன்,  கார்த்திக், மாரியப்பன், பாண்டி  ஆகியோர் மொட்டை போட்டனர். மேலும்,  நகர் பகுதியில் உள்ள 42 வார்டுகளிலும்  திமுகவினர் அஞ்சலி செலுத்தினர். சாத்தூர்: சாத்தூரில் கலைஞரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக அனைத்து கடைகளும்  மூடப்பட்டன. பஸ்கள், மினிபஸ்கள், ஆட்டோக்கள் இயங்கவில்லை. சாத்தூரில் நகர,  ஒன்றிய திமுக சார்பில் நிர்வாகிகள் 22 பேர், சாத்தூர்   முக்குராந்துகல்லில் மெட்டை போட்டு தங்கள் அஞ்சலி செலுத்தினர். இதற்கான   ஏற்பாடுகளை சாத்தூர் நகர, ஒன்றிய திமுகவினர்  செய்திருந்தனர்.

மேலும், சாத்தூரில் பஸ்நிலையம் அருகே,  காமராஜ் சிலை அருகிலிருந்து அனைத்து கட்சி மவுன ஊர்வலம் தொடங்கியது. முக்கியச் சாலைகள்  வழியாக வந்து சாத்தூர் பழைய பூங்காவில் முடிவுற்றது. பின்னர் அனைத்து கட்சி  நிர்வாகிகள் சார்பில் கலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கடையடைப்பு ராஜபாளையம்: திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி ராஜபாளையம் பகுதியில்   அனைத்து கடைகளும் மூடப்பட்டன. தொழிற்சாலைகள் ரெடிமேட்  உற்பத்தி  நிறுவனங்கள் என அனைத்து நிறுவனங்களும் இயங்கவில்லை. பஸ்கள் இயங்காததால்  பஸ்நிலையங்கள்  வெறிச்சோடிக் காணப்பட்டன. ராஜபாளையத்திலும், சுற்றியுள்ள  கிராமப் புறங்களிலும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் பேனர்கள் வைத்து  அஞ்சலி செலுத்தினர்.

சிவகாசி:
திமுக தலைவர் கருணாநிதி  மறைந்ததையொட்டி சிவகாசி, திருத்தங்கல்லில் திமுக கொடிகள் அரைக்கம்பத்தில்  பறக்க விடப்பட்டன. நகரில் கீழரத வீதி, மேலரத வீதி, வடக்கு ரத வீதி,  பஸ்நிலையம் உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால்,  நகர் வெறிச்சோடிக் காணப்பட்டன. பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. டாஸ்மாக்  கடைகள் அடைக்கப்பட்டன. நகர் முழுவதிலும் போலீஸ் பாதுகாப்பு  அதிகரிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சிக்கு...