×

ஏடிஎம் மெஷினில் ஸ்கீம்மர் பொருத்தி வாடிக்கையாளர்கள் தகவல் திருட்டு வடமாநில வாலிபர் கைது

ஆற்காடு, ஆக.8: ஆற்காட்டில் வங்கியின் ஏடிஎம் மெஷினில் ஸ்கீம்மர் கருவி பொருத்தி வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடிய வடமாநில வாலிபரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.ஆற்காடு ஜீவானந்தம் சாலையில் அரசு வங்கி உள்ளது. அந்த வங்கிக்கு அருகிலே அதன் ஏடிஎம் உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தியும், பணம் எடுத்தும் வருகின்றனர். இந்த ஏடிஎம் மையத்தில் வேலூர் அமிர்தி ரோடு, என்கே.புரத்தைச் சேர்ந்த அறிவழகன்(53) செக்கியூரிட்டியாக வேலை செய்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் வடமாநில வாலிபர் ஒருவர் நீண்ட நேரமாக ஏடிஎம் அறையில் நின்று கொண்டு அங்கு பணம் எடுக்க வரும் வாடிக்கையாளர்களை நோட்டமிட்டபடி இருந்தாராம். இதைப்பார்த்த அறிவழகன் உள்ளே சென்று எதற்காக இங்கே நின்று கொண்டிருக்கிறாய் எனக் கேட்டுள்ளார்.

அப்போது இந்தியில் அந்த வாலிபர் பேசியுள்ளார். பின்னர், அங்கிருந்த ஏடிஎம் மெஷின் மீது கருவி ஒன்று பொருத்தப்பட்டிருப்பதை பார்த்த அறிவழகன் அந்த வாலிபரை பிடித்துக்கொண்டு கூச்சலிட்டார்.இதைக்கேட்ட வெளியே நின்றிருந்த 2 வடமாநில வாலிபர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதைப்பார்த்த பொதுமக்கள், துணையுடன் ஏடிஎம் மையத்தில் இருந்த வாலிபரை பிடித்து ஆற்காடு டவுன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரம் மற்றும் போலீசார் வட இந்திய வாலிபரிடம் விசாரணை செய்தனர்.விசாரணையில் ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் பந்தர்பாலா, நியூ இஸ்லாம்பூரை சேர்ந்த ஜஹாங்கீர் அன்சாரி(26) என்பதும், இவர் தனது 2 நண்பர்களுடன் சேர்ந்து ஏடிஎம் மெஷின் மீது ஸ்கீம்மர் கருவி பொருத்தி ஏடிஎம்மில் பணம் எடுக்க வரும் வாடிக்கையாளர்களின் தகவல்களையும், ஏடிஎம் எண்ணையும் பதிவு செய்து தகவல்களை திருடிக் கொண்டிருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அவரிடமிருந்து ஏடிஎம் கார்டுகள், செல்போன், சிம்கார்டுகள் மற்றும் ரொக்கப்பணம் ₹20 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். மேலும், வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய 2 வடமாநில வாலிபர்களை தேடி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
× RELATED குடும்ப பிரச்னையால் பெண்...