×

கருணாநிதிக்கு முழு உருவ வெண்கலச்சிலை

புதுச்சேரி, ஆக. 9:  புதுச்சேரியில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு  முழு உருவ வெண்கல சிலையும், புதுவை பல்கலைக்கழகத்தில் அவரது பெயரில் ஒரு தமிழ் இருக்கையும் அமைக்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
 தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி நேற்று முன்தினம் மாலை சென்னையில் காலமானார். இதையொட்டி நேற்று புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் கருணாநிதியின் திருவுருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அதற்கு முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து, கேபினட் அறையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. முதல்வர் நாராயணசாமி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், கமலக்கண்ணன், தலைமை செயலர் அஸ்வனிகுமார், வளர்ச்சி ஆணையர் அன்பரசு மற்றும் அரசு செயலர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு 2 நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், கருணாநிதியின் நினைவாக புதுவையில் அவரது முழு உருவ வெண்கலச் சிலை அமைப்பது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அமைச்சரவை கூட்டதுக்கு பின் முதல்வர் நாராயணசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தின் முதுபெரும் தலைவர், தமிழின தலைவர், உலகத்தில் உள்ள தமிழர்களுக்கு எல்லாம் தலைவராக விளங்கி வந்த கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்த அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பதாக கூறியிருந்தேன். தற்போது அமைச்சரவையில் முடிவு செய்து 7ம் தேதியில் இருந்து 13ம் தேதி வரை ஒரு வார காலம் புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் பகுதிகளில் துக்கம் அனுசரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்கு அரசு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது. கருணாநிதி தமிழ்மொழி வளர்ச்சிக்கு தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர். எனவே அவரை போற்றும் வகையிலும், மதிக்கின்ற வகையிலும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கருணாநிதியின் பெயரில் ஒரு இருக்கை அமைக்கப்படும். இது உலகத்தில் இருந்து வருகின்ற தமிழர்கள், தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதற்கான நிதியை மாநில அரசு ஒதுக்கி கொடுக்கும்.

 காரைக்கால் பகுதியில் புதிதாக ஆரம்பிக்கப்படும் மேற்படிப்பு கல்லூரிக்கு கருணாநிதியின் பெயர் சூட்டப்படும். கோட்டுச்சேரி - திருநள்ளார் பைபாஸ் சாலைக்கு கருணாநிதி பெயர் வைக்கப்படும். புதுச்சேரியில் ஒரு தெருவுக்கு கருணாநிதியின் பெயர் வைக்க முடிவு செய்துள்ளோம். கருணாநிதிக்கு மாநில அரசின் சார்பில் முழு உருவ வெண்கலச்சிலை அமைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இதற்காக ஒரு குழு அமைத்து, அக்குழு மூலம் இடம் தேர்வு செய்து சிலை அமைக்கப்படும். கருணாநிதி மறைவையொட்டி இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கருணாநிதியின் இழப்பு தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி மாநிலத்துக்கு பேரிழப்பு. புதுச்சேரி அரசியலில் மிக பெரிய பங்கு வகித்தவர். புதுச்சேரி மாநிலத்துக்கு பல வளர்ச்சி திட்டங்களை கொடுக்க நமக்கு உதவி செய்துள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு இருந்த போது, அவர் தமிழகத்தின் முதல்வராக இருந்தபோது நாங்கள் கேட்ட திட்டங்களை எல்லாம் கொடுத்தவர். அப்படிப்பட்ட தலைவர் இப்போது இல்லை. அவருடைய மறைவு நமக்கெல்லாம் மிக பெரிய பேரிழப்பு. கருணாநிதியின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...