×

சோகத்தில் மூழ்கிய புதுச்சேரி

புதுச்சேரி, ஆக. 9: திமுக தலைவர் கருணாநிதி மறைவு காரணமாக புதுச்சேரியில் பஸ்கள்  ஓடவில்லை. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இதனால் சாலைகள் அனைத்தும்  வெறிச்சோடி புதுச்சேரி மாநிலம் சோகத்தில் மூழ்கியது.திமுக தலைவர் கருணாநிதி  உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவு செய்தியை  அதிகாரப்பூவர்மாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து  தமிழகம், புதுவை முழுவதும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமின்றி  பொதுமக்களும் கண்ணீர் கடலில் மூழ்கினர். கருணாநிதி மறைவு காரணமாக  புதுவையில் நேற்று கடைகள், வணிக நிறுவனங்கள், மார்க்கெட்டுகள் ஒட்டுமொத்தமாக  மூடப்பட்டன. அரசு பஸ்கள், தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. ஆட்டோ, டெம்போ  சேவையும் நிறுத்தப்பட்டன. இதனால் பஸ் நிலையம் மட்டுமின்றி முக்கிய  கடைவீதிகள் வெறிச்சோடியது.

பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டன.  பார்களும் திறக்கப்படவில்லை. தியேட்டர்களில் பகல் காட்சிகள் அனைத்தும்  ரத்து செய்யப்பட்டன. ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில் அங்கு பொதுமக்கள்  கூட்டம் அலைமோதியது.  சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் விடுதி, வீடுகளில்  முடங்கியதால் பொழுதுபோக்கு பூங்காக்களிலும் ஆள்நடமாட்டம் ஏதுமில்லை.  ஓட்டல்கள், டீக்கடைகள், பங்க் கடைகள் கூட மூடப்பட்டன. அவசர தேவைக்காக  மருத்துவமனை, மெடிக்கல் திறந்திருந்தாலும் ஒட்டுமொத்தமாக புதுச்சேரி சோகத்தில் மூழ்கியது. நகரப் பகுதி மட்டுமின்றி கிராமப்புறங்களிலும்  கடைகள் திறக்கப்படவில்லை. கள், சாராயக்கடைகள் கூட மூடப்பட்டன. பாதுகாப்பு  கருதி டிஜிபி சுந்தரி நந்தா உத்தரவின்பேரில் சீனியர் எஸ்பி அபூர்வா குப்தா  மேற்பார்வையில் புதுவை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள்  செய்யப்பட்டிருந்தன. காரைக்கால்:  காரைக்கால் மாவட்டம் முழுவதும்  கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பேருந்துகள் மற்றும் பெட்ரோல் பங்குகள்,  மதுபான கடைகள் இயங்கவில்லை. அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.  இதுவரையில் மாவட்டத்தில் எந்தவொரு அசம்பாவிதமும் நடைபெறவில்லை. பல்வேறு  இடங்களில் கருணாநிதியின் புகைப் படத்தை வைத்து பொதுமக்கள் மற்றும்  தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.



Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...