×

தனியார் கம்பெனியில் தீவிபத்து ரூ.6 கோடி பொருட்கள் நாசம்

வில்லியனூர், ஆக. 9: வில்லியனூர் அருகே உள்ள ஆரியபாளையம் பகுதியில் கடந்த 18 ஆண்டுகளாக துணிகளுக்கு கஞ்சி பவுடர் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வந்தது. இந்த தொழிற்சாலை புதுச்சேரியை சேர்ந்த விஸ்வநாதன் என்பவருக்கு சொந்தமானது. இங்கு 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சுழற்சி முறையில் பணிபுரிந்து வந்தனர். வெளியூர்களிலிருந்து மூலப் பொருட்களை வாங்கி வந்து கஞ்சி பவுடர் தயாரித்து வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் பொருட்கள் இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.  இந்நிலையில் கலைஞர் கருணாநிதி மறைவுக்கு நேற்று அரசு விடுமுறை அறிவித்திருந்ததால் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் கம்பெனியை மூடி விட்டு அனைவரும் சென்றுவிட்டனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு கம்பெனியில் திடீரென மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் வாட்ச்மேன் மற்றும் கம்பெனியின் நிர்வாகத்தினருக்கு தகவல் கொடுத்தனர். பிறகு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்ததின் பேரில் வில்லியனூர், கோரிமேடு, பாகூர், திருபுவனை, சேதராப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆறு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன.  பின்னர் தீயை அணைக்கும் பணியில் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு 2 மணி நேரமாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். மேலும் கம்பெனியில் இருந்த கேஸ் சிலிண்டர் மற்றும் ஆயில் டேங்கரில் தீப்பற்றுவதற்குள் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதனால் நள்ளிரவில் நடைபெறஇவிருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

எனினும் இத்தீவிபத்தில் கம்பெனியில் இருந்த உயர்  ரக இயந்திரங்கள் மற்றும் தயாரித்து வைக்கப்பட்டிருந்த கஞ்சி பவுடர்  உள்ளிட்ட சுமார் ரூ.6 கோடிக்கு மேல் உள்ள பொருட்கள் முற்றிலும் எரிந்து  தீயில் கருகி நாசமானதாக கூறப்படுகிறது.  இக்கம்பெனியில் தீயை அணைப்பதற்கான எந்தவித அடிப்படை வசதிகள் மற்றும் தண்ணீர் தொட்டிகள் இல்லாததால் தீயை அணைக்க முடியாமல் வீரர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர். இது குறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு தாசில்தார் மேத்யூ பிரான்சிஸ் நேரில் வந்து ஆய்வு செய்தார். பின்னர் இது சம்பந்தமாக வில்லியனூர் சப்-இன்ஸ்பெக்டர் வேலையன் வழக்கு பதிந்து தீவிபத்திற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.


Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...